அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், சமாதான முயற்சிகளில் தோல்வியடையும் : ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் யுத்தத்தில் வேண்டுமானால் வெற்றி பெறக் கூடும் ஆனால் நாட்டின் சமாதானம் மற்றும் சுபீட்சத்தை நிலைநாட்டுவதில் பாரிய தோல்வியை எதிர்நோக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.அரசாங்கத்தின் இந்த யுத்த முன்நகர்வுகளினால் பாரியளவு அப்பாவிச் சிவிலியன்களது உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
யுத்த வெற்றி குறித்து ஆளும் கட்சி மார்தட்டிக் கொண்ட போதிலும், உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு தந்திரோபாய ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியே அடித்தளத்தை அமைத்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மிகவும் அமைதியான முறையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி சூட்சுமமான முறையில் மேற்கொண்டதென அவர் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் அடைந்து வரும் இலகு வெற்றிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மதி நுட்பமான அணுகுமுறையே வழியமைத்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதன் காரணமாகவே பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள், தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க முனைப்பு காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக வெற்றி கொள்வதன் மூலம் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என எவரும் எதிர்பார்த்தால் அது ஓர் முட்டாள்தனமான கருதுகோளாகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெறும் யுத்த வெற்றிகள் சமாதானத்தை ஏற்படுத்த வழியமைக்காதென வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply