அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி சிரியா அரசுக்கு ரஷியா, ஈரான் ஆதரவு

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் முகாமின் மீது சிரியா நாட்டு விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சுமார் நூறு பேர் உயிரிழந்ததாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடியாக சிரியா நாட்டு விமானப் படைக்கு சொந்தமான தளத்தின்மீது சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

மேலும், சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது மற்றும் சிரியாவின் இறையாண்மையை அவமதிக்கும் வகையில் அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் சிரியா அரசுக்கு எதிராகவும், ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் உரையாற்றினர்.
இந்நிலையில், சிரியா அதிபருடன் தொலைபேசி மூலம் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, அமெரிக்காவின் அத்துமீறலுக்கு அடி பணிய வேண்டாம் என வலியுறுத்தினார். நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரவுஹானி, சிரியா விவகாரம் தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், சிரியா அரசை தொடர்ந்து ஆதரிப்பது என்னும் தங்களது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர்கள் தீர்மானித்தனர்.

இதற்கிடையே, சிரியா நாட்டு விமானப்படை தளத்தின் மீதி அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரான் நாட்டு மூத்த தலைவர் அயாத்துல்லா கமேனி,

அமெரிக்காவின் தற்போதைய ஆட்சியாளர்களும் அவர்களது முன்னோர்கள் செய்த அதேதவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர். அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு பயந்து சிரியாவை ஆதரிக்கும் எங்களது நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் நடைபெற்று வரும் ஷியா பிரிவினரின் ஆட்சிக்கு பக்கபலம் சேர்க்கும் வகையில் பணம் மற்றும் ஆயுத உதவிகளை கடந்த ஆறாண்டு காலமாக செய்து வரும் ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் ஷியா பிரிவினருக்கு போர் பயிற்சி அளித்து, ஆயுதங்களையும் அளித்து சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக களமிறக்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply