புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது
பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியேறிவரும் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 பொதுமக்கள் காயமடைந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். “தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 பொதுமக்கள் காயமடைந்திருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன” எனப் பெயர்குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரியொருவர் கூறியிருப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவப் பேச்சாளர் உடனடியாக கருத்துத் தெரிவிக்காவிட்டாலும், மேலும் இரண்டு இராணுவ வட்டாரங்கள் இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இராணுவத்தின் 11வது காலாற்படை, கெமுனு வொட்ச் 9, கஜபா ரெஜிமன்ட் 8, விசேட படையணி மற்றும் இராணுவக் கொமாட்டோப் படையணி ஆகியன இணைந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை பாதுகாப்பு வலயமான புதுமாத்தளன் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மண் அணையின் இரண்டரைக் கிலோ மீற்றரைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த மண் அணையை உடைத்துச் சென்ற இராணுவத்தினர் பாதுகாப்பு வலயத்திலிருந்த மக்களை மீட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply