பேச்சுவார்த்தைக்கு முன் பதவி குறித்து பேசுவது பண்பாடாக இருக்காது – பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவரது தோழி சசிகலா முதல்- அமைச்சராக முயன்றதால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தரப்பினர் அ.தி.மு.க. அம்மா என்ற பெயரிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரிலும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த இரு அணிகளையும் ஒன்றாக இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க. கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீண்டும் பெற வேண்டுமானால் இரு அணிகளும் இணைவதை தவிர வேறு வழி இல்லை என்பதால் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சசிகலா அணி தரப்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் குழுவும், ஓ.பி.எஸ். அணி தரப்பில் முனுசாமி தலைமையில் 7 பேர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 14 பேரும் நேற்று (முதல் முறையாக சந்தித்து இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை மற்றும் சசிகலா பொது செயலர் பதவி பறிப்பு ஆகிய 2 நிபந்தனைகளை பன்னீர்செல்வம் அணி தரப்பு முன்வைத்தது.
இதற்கு பதிலளித்த முதல்வர் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கம், இரண்டும் முறையே கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன் முன்பு உள்ளது. இதன் மூலம் வரும் முடிவின்படியே முடிவுகள் எடுக்கப்படும் என கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு முன்பே நிபந்தனை வைத்தால் முட்டுக்கட்டை ஏற்படும். நிபந்தனை வைப்பதுடன், ஓ.பி.எஸ்., அணியினர் மாறி மாறி பேசி வருகின்றனர். இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார். இதனால் இந்த பேச்சுவார்த்தை நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மதுசூதனுடனான ஆலோசனைக்கு பின்னர் ஆர்.கே. நகரில் பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். அதில், இரு அணிகளும் பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துள்ள நிலையில், அதற்கு முன் பதவி குறித்து பேசுவது பண்பாடாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரு அணிகள் பேச்சுவார்த்தை தொடர்பாக வைத்திலிங்கம் கே.பி.முனுசாமிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய தகவலுக்கு உரிய பதில் அளிக்கப்படும். பேச்சுவார்த்தை பற்றி எடப்பாடி பழனிசாமி அணிக்கு நல்ல முடிவு தெரிவிக்கப்படும் என பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply