பொலிஸ் சேவையில் 2000 தமிழ் இளைஞர்-யுவதிகள் : அமைச்சர் வி. முரளிதரன்
கிழக்கு மாகாணத்திலிருந்து 2000 தமிழ் இளைஞர் – யுவதிகளை விரைவில் பொலிஸ் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் சிவில் பாதுகாப்பு குழுவுக்குப் பொறுப்பான மின்சக்தித்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன உட்பட பாதுகாப்பு அதிகாரிகள், சிவில் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பதன் நோக்கம் தொடர்பாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மாநாட்டில் விளக்கிக் கூறினார். அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பேசுகையில்,
“மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைக்கும் யோசனைகளை ஜனாதிபதி முன்வைத்ததையடுத்து அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் சேவைக்குத் தெரிவு செய்யப்படும் இளைஞர் யுவதிகளுக்கு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியிலேயே பயிற்சி வழங்கப்படும்.
இதனைத் தவிர தமிழ்ப் பொலிசாருக்கு சிங்கள மொழியையும் சிங்களப் பொலிசாருக்குத் தமிழ் மொழியையும் கற்பிப்பதற்கான விசேட பயிற்சித் திட்டமொன்றை தேசிய நல்லிணக்க அமைச்சு ஊடாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
மாநாட்டின் பின்னர், அமைச்சர்களும் பொலிஸ் மா அதிபரும் கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கும் விஜயம் செய்து அங்குள்ள நிலமையைப் பார்வையிட்டனர்.
அமைச்சர்கள், பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வருகையையொட்டி மட்டக்களப்பு நகரில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலதிக வீதித் தடைகள், வீதிச் சோதனைகள், சில குறிப்பிட்ட வீதிகள் ஊடாக போக்குவரத்துத் தடை ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்நோக்க வேண்டியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply