35 ஆயிரம் பேர் மோதல் பிரதேசங்களிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு உள்ளனர்: ஜனாதிபதி
இலங்கை இராணுவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து மேற்கொண்ட விசேட இராணுவ நடவடிக்கையின் பலனாக சுமார் 35,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் திங்களன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் புதுமாத்தளன் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் புதுக்குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்திருக்கிறார். திங்கட்கிழமை காலை இலங்கை விமானப்படையின் நடவடிக்கை தலைமையகத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்னர் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இதனைத் அறிவித்தார்.
விடுதலைப் புலிகள் தங்கள் வசம் எஞ்சியிருக்கும் பகுதியில் அமைத்திருந்த பெரிய மண் அரண்களை அரச படையினர் தகர்த்து எறிந்த பிறகு பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறினர்.
இவ்வாறு பொதுமக்கள் வெளியேறும்போது அவர்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய மூன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 17 பேர் பலியாகியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
புலிகளின் பகுதியிலிருந்து மக்கள் பல்லாயிரக்கணக்கில் தமது குழந்தைகளுடனும், மூட்டை முடிச்சுக்களுடனும் வெளியேறும் வீடியோ காட்சிகள், இன்று விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடம் காண்பிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளும், அவர்களது தலைவர்களும் கொல்லப்படுவதனைத் தான் விரும்பவில்லையென்றும், அதனால் அவர்கள் படையினரிடம் தமது ஆயுதங்களைக் கையளித்து விட்டு சரணடைவதே உசிதமானது என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, வன்னியில் எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகரனையும், ஏனைய உறுப்பினர்களையும் அடுத்த 24 மணித்தியாலங்களிற்குள் சரணடையுமாறு அரசாங்கம் காலக்கெடுவிதித்திருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply