சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்
இலங்கையின் வெல்லவேத் நகரத்தை சேர்ந்தவர் அப்துல் (வயது 29). இவர் தனது மனைவி நசுரா (21), தாயார் லிஸ்பியா (54), சகோதரர் அர்ஷத் (34) ஆகியோருடன் கடந்த 26-ந் தேதி சென்னைக்கு சுற்றுலா வந்தார். பாரிமுனை மண்ணடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர்கள், சென்னை மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர். ஒவ்வொரு முறை வெளியே சென்றபோதும் அப்துல், ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் முன்பதிவு செய்துள்ளார். அனைவரும் காரிலேயே சென்று வந்தனர். இந்த நிலையில், அவர்களின் சென்னை சுற்றுப்பயணம் நிறைவடைந்து வரும் 3-ந் தேதி மீண்டும் இலங்கை திரும்ப வேண்டியிருந்தது. இதனால், சுற்றுலாவின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதால், பொருட்கள் வாங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை தியாகராயநகர் சென்று பொருட்கள் வாங்க திட்டமிட்டனர்.
அங்கு செல்வதற்காக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில், அப்துல் காரை முன்பதிவு செய்தார். காரில் அப்துல், அவரது மனைவி நசுரா, தாயார் லிஸ்பியா, சகோதரர் அர்ஷத் ஆகியோர் தியாகராயநகர் சென்றனர். பல்வேறு கடைகளில் பொருட்கள் வாங்கிய அவர்கள் மாலை 3.30 மணிக்கு அங்கிருந்து மீண்டும் மண்ணடியில் உள்ள தங்கும் விடுதிக்கு திரும்பினர்.
அவர்கள் வந்த காரை பூந்தமல்லி அருகேயுள்ள புளியம்பேடு கிராமத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் (35) ஓட்டிவந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், சாலைகள் வெறிச்சோடி இருந்ததால், முத்தீஸ்வரன் காரை சற்று வேகமாக ஓட்டிவந்ததாக தெரிகிறது. மாலை 4.15 மணியளவில், கார் பாரிமுனை ராஜாஜி சாலையில் ஐகோர்ட்டு அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள சுரங்கப்பாதைக்குள் வேகமாக பாய்ந்தது. சினிமா படத்தில் வரும் காட்சியை போல் நடந்த இந்த விபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நேரத்தில் சுரங்கப்பாதையிலும் குறைவான வாகனங்களே சென்றதால், மேலே இருந்து சீறிப்பாய்ந்த கார், எந்த வாகனத்தின் மீதும் விழவில்லை. ஆனால், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், காரை ஓட்டிய டிரைவர் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை நேரில் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தார். அதுவரை, சாலையில் சென்றவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
விபத்து சம்பவத்தை கேள்விப்பட்டு அருகில் உள்ள சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்தனர். ஆம்புலன்ஸ் வேன் வந்ததும், 5 பேரும் மீட்கப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நசுராவுக்கு மட்டும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. டிரைவர் உள்பட மற்ற 4 பேருக்கும் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, யானைகவுனி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கார் வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சென்னைக்கு குதூகலமாக சுற்றுலா வந்த இலங்கை பயணிகளுக்கு இந்த விபத்து பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply