சிரியா அகதிகள் முகாம் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆவேச தாக்குதல் : 46 பேர் பலி

சிரியாவில் நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உயிர் பயத்தால் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தற்காலிக நிவாரண முகாம்களில் அடைக்கலம் அடைந்து, அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அவ்வகையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ரக்கா நகரில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் ஆயுதக் குழுக்களை ஒடுக்குவதற்காக அந்நாட்டு ராணுவம் உச்சகட்ட தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பயந்த சுமார் 300 குடும்பங்கள் அண்டை நாடான ஈராக்குக்கு தப்பிச் செல்லும் நோக்கத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, சிரியா-ஈராக் எல்லையோரம் உள்ள தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த முகாமுக்குள் புகுந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள், துப்பாக்கிகளால் சுட்டும், தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தும் ஆவேச தாக்குதல் நடத்தினர். அந்த முகாமுக்கு பாதுகாப்பாக இருந்த ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளின்மீது எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பொதுமக்களில் 31 பேரும், ராணுவ வீரர்கள் 15 பேரும் பலியானதாக லெபனான் நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பலர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில் தாக்குதல் நடந்த முகாமில் இருந்த சுமார் 400 பேர் அவசரமாக வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படும் காட்சிகளை சிரியா ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply