கொடநாடு கொலை – கொள்ளை: டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த திட்டம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந் தேதி 11 பேர் கும்பல் புகுந்தது.காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த கும்பல் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கினர். பின்னர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைக்குள் சென்று 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். சயான் பாலக்காடு அருகே விபத்தில் காயமடைந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சாமியாரும், ஹவாலா கும்பல் தலைவனுமான மனோஜ், சந்தோஷ், தீபு, சதீ‌ஷன், உதயகுமார், சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்ற மனோஜ் மற்றும் ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள குட்டி என்கிற பிஜினை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்னென்ன? என்பது மர்மமாகவே இருக்கிறது. கும்பல் தாக்கியதில் காயமடைந்த காவலாளி கிருஷ்ணபகதூர் கொடுத்த புகாரிலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை தொடர்பாக பங்களா நிர்வாகம் தரப்பில் எந்த புகாரும் கொடுக்கவில்லை.

இவ்வழக்கில் இதுவரை ஜெயலலிதா படத்துடன் கூடிய 5 கைக்கடிகாரங்கள், கண்ணாடி அலங்கார பொருள் ஆகியவற்றை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பங்களா அறையில் திறந்து கிடந்த 3 சூட்கேஸ்களில் என்னென்ன இருந்தது என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. பங்களாவில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் ஜெயலலிதாவின் உயில் உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல் வெளியானது. எனவே உண்மையிலேயே பங்களாவில் இருந்து கொள்ளை போனது என்னென்ன? என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு பங்களா நிர்வாகம் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரது கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. எனவே பங்களாவில் இருந்து என்னென்ன கொள்ளை போனது? என்பதை உறுதி செய்வதற்காக சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கனகராஜ் மற்றும் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்ததில் நீலகிரி, திருப்பூர், சேலம் மாவட்டங்களை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் இவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இந்த கும்பலுடன் எந்த வகையில் தொடர்பில் இருந்தார்கள்? கொள்ளை சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply