அண்ணாநகரில் காரை ஏற்றி ஆசிரியை கொலை இளையராஜா கைது

கொலையுண்ட ஆசிரியை பெயர் நிவேதா (47). கோவை தொழவன் பாளையம், அண்ணாமலை நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர். ஆசிரியை படிப்பு முடித்த பின்பு கோவையில் அரசு பள்ளியில் ஆசிரியை வேலைக்கு சேர்ந்தார்.திருமணமாகி கவுசல்யா என்ற மகள் இருக்கிறார். அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். மகள் சென்னை மகேந்திரா சிட்டியில் பணிபுரிந்து வருகிறார்.

பிரிந்து வாழும் நிவேதாவுக்கும், கோவை தீயணைப்பு துறையில் டிரைவராக பணிபுரியும் இளையராஜா(29)வுக்கும் காதல் ஏற்பட்டது. இளையராஜாவுக்கு சொந்த ஊர் கம்பம். திருமணமாகி 6 மாத கைக்குழந்தை உள்ளது. கோவை சிங்காநல்லூர் தீயணைப்பு துறை குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

அப்போது நிவேதாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.

இந்த நிலையில் நிவேதாவுக்கு பேஸ்புக் மூலம் சென்னை கொளத்தூர் வஜ்ரவேல் நகரைச் சேர்ந்த கணபதி(33) என்பவரது நட்பு கிடைத்தது. இருவரும் பேஸ்புக் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். கணபதியும் திருமணமானவர்.

இருவரும் புகைப்படங்களை பரிமாறிக் கொள்வது, அதற்கு விருப்பம் தெரிவிப்பது, விமர்சனம் செய்வது என நாளுக்கு நாள் நட்பு வளர்ந்தது. எந்நேரமும் நிவேதா பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடந்தார். கணபதியுடனான நட்பால் காதலர் இளையராஜாவை மறக்கும் அளவுக்கு சென்று விட்டார்.

நிவேதாவின் பேஸ்புக் காதலர் விவகாரம் இளையராஜாவுக்கு தெரிய வந்ததும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ‘பேஸ் புக்’ காதலரை கைவிடுமாறு எச்சரித்தார் என்றாலும் நிவேதா தொடர்ந்து கணபதியுடன் பேஸ் புக்கில் நட்பில் இருந்தார்.

இதையடுத்து கணபதியை நேரில் சந்தித்து நிவேதாவுடனான நட்பை கைவிடுமாறு எச்சரிக்க இளையராஜா முடிவு செய்தார்.

இதையடுத்து காதலி நிவேதாவுடன் இளையராஜா கோவையில் இருந்து காரில் சென்னை வந்தார். அண்ணாநகர், 3-வது அவென்யூ, நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள காந்தி ஆஸ்பத்திரி அருகே காரை நிறுத்தினர். அந்த இடத்துக்கு வருமாறு கணபதியை அழைத்தனர்.

3 பேரும் அங்கு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இறுதியில் நிவேதாவுடனான நட்பை கைவிட கணபதி சம்மதித்தார்.

கணபதி தனக்கு கடன் ஏற்பாடு உள்பட பல்வேறு உதவிகள் செய்துள்ளார். எனவே அவருடன் தனியாக சிறிது நேரம் பேசி விட்டு வருகிறேன் என்று சொன்னார். அதற்கு இளையராஜா சம்மதித்தார்.

நிவேதா கணபதியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இருவரும் நெருக்கமாக அமர்ந்து செல்வதை பார்த்ததும் இளையராஜாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

தனது காரை வேகமாக ஓட்டி சென்று நிவேதா-கணபதி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார். நிவேதா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கணபதி லேசான காயம் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிவேதாவை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் நிவேதா உயிர் பிரிந்து விட்டது.

நிவேதா உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் துணை கமி‌ஷனர் பெரோஸ் கான், உதவி கமி‌ஷனர் சந்திரசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

தப்பி ஓடிய இளையராஜாவை இரவு முழுவதும் தேடினர். இன்று அதிகாலை இளையராஜா கைது செய்யப்பட்டார். காரையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

காயத்துடன் தப்பிய கணபதிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிவேதா கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply