பாரதப் பிரதமரின் செவிகளில் மலையக அரசியல் தலைவர்கள் எதனைக் கூறப்போகிறார்கள்?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயம் மலையகத்தில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையிலான முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அநேகமானவர்களின் எதிர்பார்ப்பாகும்.எனினும், பாரதப் பிரதமரின் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு அரங்கேறும் அரசியல் நிகழ்வுகள் இன்று நாட்டின் அரசியல் அரங்கில் பிரதான தலைப்பாக மாறியுள்ளது.

பாரதத்தில் இருந்து தொழிலுக்காக கடல் கடந்து வந்த இந்திய வம்சாவளி மக்கள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

காலனித்துவ ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட குடியிருப்புக்களில் இன்றளவும் சிலரது வாழ்க்கைச்சக்கரம் சுழல்கின்றமை கவலைக்குரியதே.

நாட்டின் பொருளாதாரத்தை நிமிரச் செய்வதற்காக தினமும் தலைகுணிந்து தேயிலை பறிக்கும் இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகவே தொடர்கிறது.

வனவிலங்குகள், இயற்கை அனர்த்தங்கள் என சற்றும் குறைவிலாத ஆபத்துக்களுடன், பாதுகாப்பற்ற தொழிலாளர் தொடர் குடியிருப்புக்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த குடியிருப்புக்களின் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக பல உயிர்கள் பறிபோனதுடன் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தது.

இந்தியாவின் அயல் நாடான இலங்கையில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது இன்றும் கேள்விக்குறியே?

இந்தப் பின்புலத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயம் அமையப்போகிறது.

இந்த சிறந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு ஒன்றிணைந்து பயன்படுத்துவது என்பதனை சிந்திக்காமல் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது பலத்தை நிரூபிப்பதற்காக, இதனைப் பயன்படுத்த முயல்வதையே அண்மையில் நோர்வூட்டில் இடம்பெற்ற சம்பவம் பிரதிபலிக்கின்றது.

மலையகத்தின் பல பகுதிகளில் இந்தியப் பிரதமரின் புகைப்படத்துடன் தமது புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, வாகனங்களிலும் அதனை ஒட்டி நடமாடும் காட்சிகளை இன்றும் காணமுடிகின்றது.

நோர்வூட் நகரில் இருந்து 3 கிலோமீற்றர் தூரத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அமைந்துள்ளது.

1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை 152 வருட வரலாற்றைக் கொண்டது.

வைத்தியசாலையில் நிலவிய குறைபாடுகளையும் மக்களின் தேவைகளையும் கருத்திற்கொண்டு 2011 ஆம் ஆண்டு புதிய மூன்று மாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் 2013 ஆம் ஆண்டு நிறைவடைந்த போதிலும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக அந்தக் கட்டடம் மூடப்பட்டிருந்தது.

150 கட்டில்களையும் 6 சத்திரசிகிச்சைப் பிரிவுகளையும் ஒரு அவசர சிகிச்சைப் பிரிவையும் நவீன சமயலறை, வைத்தியர்களுக்கான விடுதி என சகல வசதிகளையும் உள்ளடக்கி இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அவசரமாகத் திறந்து வைக்கும் முயற்சிகள் மலையக அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

இந்நிலையிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 12 ஆம் திகதி டிக்கோயோ வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இதனால், இந்திய உயர்ஸ்தானிகர் சரன்ஜித் சிங் இன்று வைத்தியசாலைக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply