ராஜஸ்தானில் திருமண மண்டபம் இடிந்து 26 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள சீவர் சாலையில் நேற்றிரவு ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் அந்த திருமண மண்டபத்தில் திரண்டிருந்தனர். மண்டபத்தின் ஒரு பகுதியில் விருந்து நடந்து கொண்டிருந்தது.

திடீரென அந்த பகுதியில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இடியும், மின்னலும் கடுமையாக இருந்தது. சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நிறைய மரங்கள் சரிந்து விழுந்தன.

அப்போது திருமண மண்டபத்தின் ஒரு பகுதி சுற்றுச்சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. 90 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட அந்த சுவர் ஓரத்தில், மக்கள் சூறாவளியில் இருந்து தப்பிக்க தஞ்சம் அடைந்திருந்தனர். அவர்கள் மீது சுவர் விழுந்து நசுக்கியது.

அந்த சுவர் ஓரத்தில்தான் சுய சேவை உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீ சாரும், தீயணைப்புப் படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இடிபாடுகளை அகற்றிய போது 22 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தது தெரிந்தது. ஏராளமானவர்கள் காயங்களுடன் உயிருக்கும் போராடியபடி கிடந்தனர். அவர்களை மீட்டு ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

இதுபற்றி அறிந்ததும் முதல்-அமைச்சர் வசுந்தர ராஜே சிந்தியா அதிர்ச்சியும் இரங்கலும் வெளியிட்டார். சுவர் இடிந்தது பற்றி விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பருவ நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பலத்த சூறாவளி காற்று வீசியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply