மனித இனத்தை போன்ற மற்றுமொரு இனம் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம ஆதாரங்கள் கிடைத்துள்ளன.ஹோமோ நலெடி என்றழைக்கப்படும் இந்த மனித இனம், நவீன மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்பே அழிந்துவிட்டதாக முன்பு கருதப்பட்டது.
தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கருத்தை மாற்றியமைத்திருக்கிறது.நியோ என்று பெயரிடப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டின் உதவியுடன் ஆய்வாளர்கள் இதை செய்துள்ளனர்.
மண்ணில் புதையுண்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட இந்த எலும்புகளைக்கொண்டு ஹோமோ நலெடி என்கிற மனித இனம் 230,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கணக்கிட்டுள்ளனர்.
முன்பு நினைத்ததைவிட இவர்கள் வாழ்ந்த காலம் நவீனமனிதர்களுக்கு நெருக்கமானது.
தென் ஆபிரிக்காவின் இந்த பகுதியில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள இந்த மனித இனமும் நவீன மனிதர்களின் மூதாதையர்களும் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அந்த பகுதியின் குகைகளுக்குள் விஞ்ஞானிகள் இந்த புதிய மனித இனத்தின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.
நிலத்துக்கு அடியில் 30 மீட்டர் ஆழத்தில் பாறை இடுக்குகளில் புகுந்து கும்மிருட்டில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட ஆய்வாளர்கள், நூற்றுக்கணக்கான எலும்புகளையும் பற்களையும் அங்கே கண்டெடுத்தனர்.
மனித மூதாதைய இனத்தவர் இறந்தவர்களை இங்கே புதைத்திருக்கக்கூடும் என்பதை இந்த சான்றுகள் குறிப்புணர்த்துகின்றன. அத்தகைய சடங்குகளுக்கான முதல் சான்றாக இது பார்க்கப்படுகிறது.
அவர்கள் இரண்டு கால்களில் நடந்தனர். ஆரஞ்சுபழ அளவிலான சிறிய மூளையைக்கொண்டிருந்தனர்.
முன்பு கண்டறியப்படாத குகைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நியோவின் எலும்புக்கூடு எதிர்கால ஆய்வுக்கான திசையை காட்டுகிறது.
நவீன மனிதர்கள் இந்த பூமியில் வேறு யாரோடெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதற்கான மேலதிக தரவுகள் இந்த ஆபிரிக்க நிலத்திற்குள் புதையுண்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய மனித இனத்தின் தொழில்நுட்பம், உபகரணங்கள், மரபுகள் போன்றவை நமக்கும் முன்பே இந்த பூமியில் வாழ்ந்தவர்களுடையவையாக இருக்கலாம் என்கிற சாத்தியத்தை இந்த புதிய கண்டுபிடிப்புகள் குறிப்புணர்த்துகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply