அரசியல் முரண்பாடுகளுக்காக சர்வதேசத்திடம் நாட்டை காட்டிக்கொடுக்கக் கூடாது: ஜனாதிபதி
எமக்கிடையில் நிலவும் அரசியல் முரண்பாடுகளுக்காக தாய்நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கவோ, சூழ்ச்சி செய்யவோ கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதேநேரம், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு பிரபாகரன் உடனடியாக அரசாங்கத்திடம் சரணடைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மூன்று தசாப்த கால குரூர பயங்கரவாதத்தால் உயிரிழப்புக்களுக்கும், சொத்தழிப்புக்களுக்கும் முகம் கொடுத்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் ஒருபகுதி எஞ்சியுள்ளது என்று கூறினார்.
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஐ. தே. க. முக்கியஸ்தர்கள் அக்கட்சியை விட்டு விலகி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ளனர். இவர்களை வரவேற்கும் வகையில் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
ஐ. தே. கவை விட்டு விலகி ஐ. ம. சு. முயில் இணைந்திருக்கும் உங்களை வரவேற்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.தேர்தல் காலங்களில் எமக்கிடையில் அரசியல் பேதங்கள் நிலவலாம். தேர்தல் முடிந்த கையோடு அப்பேதங்களை மறந்து விட்டு சகலரும் ஒன்றுபட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய பங்களிப்புச் செய்ய வேண்டும். இதுவே சிறந்த பண்பாகும்.
ஆனால், எமக்கிடையில் அரசியல் பேதம் நிலவுவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு கடனுதவி வழங்க வேண்டாம். ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் கொடுக்கக் கூடாது. நாட்டில் சுதந்திரமில்லை. தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அபாண்டமான பொய்களை எதிரணியினரும், புலிகளின் ஆதரவாளர்களும் வெளிநாடுகளில் கூறுகின்றார்கள்.
இவர்கள் கூறுவது போன்று இங்கு பிரச்சினையே இல்லை. எமக்குள் நிலவும் அரசியல் பேதங்களுக்காகவே இவர்கள் நாட்டைச் சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கிறார்கள். தாயகத்தின் மீது பற்று, பாசம் கொண்ட எவரும் இவ்வாறு ஒருநாளும் செய்யமாட்டார்கள்.
தாயகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளே சரியானவை என்பதை எமது மக்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் உறுதிப்படுத்தி வருகின்றார்கள். மக்கள் எம்முடன் இருப்பதால் தான் வெளிநாடுகள் எம் விவகாரத்தில் தலையிட முடியாதுள்ளது. நாம் எப்போதும் மக்கள் ஆணையை மதித்து, அதற்கேற்ப செயற்படுபவர்கள்.
ஐ. தே. க. ஆட்சிக் காலங்களில் புலிகள் பலமடைந்தார்கள். இதனால் அவர்களே புலிகளுக்கு நிர்வாக அதிகாரத்தை எழுதிக் கொடுத்தனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட புலிகள் பொலிஸ், கடல், விமான கட்டமைப்புக்களை ஏற்படுத்தினர். எமது படையினரிடம் இல்லாத பீரங்கிகள், சுடுகலங்கள், அவர்களிடம் இருந்துள்ளது. இவை எவ்வாறு சென்றன? இதற்கு டெக்ஸி அபேரின் வாக்கு மூலம் நல்ல சான்றாக உள்ளது.
மக்களின் தேவை எதிர்பார்ப்பு பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே.அதற்கேற்ப செயற்படுகிறோம். யுத்தம் நடக்கிறது என்பதற்காக கடந்தகால ஆட்சியாளர்களைப் போல் நாம் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை இடைநிறுத்தவில்லை. மின்சாரம், நீர்பாசனம், துறைமுகங்கள், வீதிகள் என பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் எமது அயல்நாடுகளில் போன்று ஒரு நிமிடம் கூட மின்வெட்டு மூலம் எம் மக்களை இருட்டில் வைக்கவில்லை.
நாம் ஒவ்வொரு வேலைத் திட்டத்தையும் எமது மக்களையும், எமது எதிர்கால சந்ததியினரையும் கருத்தில் கொண்டே முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, டாக்டர் ராஜித சேனாரட்ன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply