காஷ்மீர் எல்லையில் தொடரும் அத்துமீறல் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் சாவு; 3 பேர் காயம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்தனர். இதனால் எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ரஜோரி மாவட்டத்தின் நவுஷேரா பகுதியில் கடந்த 11–ந்தேதி நடந்த தாக்குதலில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 3 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக நேற்றும் ரஜோரி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியது.

 

அங்குள்ள ஜன்கார், பவானி, லாம், கம்பா உள்ளிட்ட எல்லையோர கிராமங்களை குறிவைத்து அந்த நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் தொடுத்தனர். சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த குக்கிராமங்கள் பலத்த சேதமடைந்தன.

 

 

 

காலை சுமார் 7.15 மணியில் இருந்து நடந்த இந்த தொடர் தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

 

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதல்களுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்தது. எனினும் பாகிஸ்தான் தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இல்லை.

 

 

 

எல்லையில் நடந்து வரும் இத்தகைய தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக, மேற்படி கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு ராணுவத்தினர் அப்புறப்படுத்தினர். முன்னதாக நவுஷேரா பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தனர்.

 

இதைப்போல பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக ரஜோரி மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு கடந்த 11–ந்தேதி முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டு உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply