பெரும் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் படைத்தது புதிய ஏவுகணை: வடகொரியா

ஞாயிறுக்கிழமையன்று தாங்கள் நடத்திய புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை, மிக பெரிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் படைத்த ஒரு புதிய வகை ராக்கெட் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.செங்குத்தான கோணத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 2000 கிலோ மீட்டர் உயரத்துக்கு சென்றது. கிட்டத்தட்ட, 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்து ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.

புதிதாக பேலிஸ்டிக் ராக்கெட்டை உருவாக்கிய தங்களின் திறமையை பறைசாற்றவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

”வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கிம் ஜாங்-உன்னின் சித்த பிரமையே காரணம்”

ஐ .நா. சபை அமைப்பு விதித்த தடைகளை மீண்டும் மீறும் விதமாக அமைந்த இந்த சோதனைகள் பரவலாக கண்டனங்களை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு மீண்டும் மீண்டும் வட கொரியா நடத்திய பல சோதனைகள் சர்வதேச அளவில் எச்சரிக்கை ஏற்படுத்தியதோடு, அமெரிக்காவுடனான வட கொரியாவின் உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வட கொரியா நடத்திய இவ்வாறான சோதனைகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை தொடர்பாக செவ்வாய்க்கிழமையன்று ஐ .நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஓர் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்காவும், ஜப்பானும் அழைப்பு விடுத்துள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட நடுத்தர / தூர வகை மூலோபாய பேலிஸ்டிக் ராக்கெட்டான வாஸோங்-12 திட்டப்படி செலுத்தப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ செய்தி முகமை திங்கள்கிழமையன்று தெரிவித்துள்ளது.

”எடை அதிமுள்ள மிகப் பெரிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட பேலிஸ்டிக் ராக்கெட்டின் தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப குறிப்புகளை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது” என்று கேசிஎன்ஏ செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்பொழுதும் போல் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்நின் மேற்பார்வையில் இந்த சோதனை நடைபெற்றதாக கேசிஎன்ஏ செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply