ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனையை நூறு ஆண்டுகளுக்கு உலகம் பேசும்
1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தின் மூலம் ஐ.தே.க. அரசாங்கம் சர்வதேச ரீதியில் ஏற்படுத்திய களங்கம் பெருந்திரளான தமிழ் மக்களை நேற்று முன்தினம் எமது அரசாங்கம் மீட்டதன் மூலமாக துடைக்கப்பட்டிருப்பதாக ஐ.ம.சு.முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர். மக்களை மீட்க ஜனாதிபதி முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையை முழு உலக நாடுகளும் பாராட்டுவதாகவும் பிரபாகரனின் முடிவு இன்னும் சில மணி நேரங்களில் படையினரால் தீர்மானிக்கப்பட்டு விடும் எனவும் அவர்கள் கூறினர்.
ஐ.ம.சு.முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன,
30 வருடகால யுத்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பலவும் பணயக் கைதிகளாக உள்ள பொதுமக்களை மீட்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டு பிரமித்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனையை நூறு ஆண்டுகளுக்கு உலகம் பேசும் என அந்த நாட்டு படைத்தளபதிகளும் யுத்த ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.
பிரபாகரனை பூண்டோடு ஒழிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தபோதும் ஜனாதிபதி எதற்கும் அடிபணியவில்லை.
ஜனாதிபதியினதும் பாதுகாப்புப் படையினதும் முயற்சியால் கிடைத்த இராணுவ வெற்றியில் பங்காளியாக ஐ.தே.க. முயல்கிறது. ஆனால் ஐ.தே.க. ஆட்சியிலே புலிகளுக்கு ஒருபகுதி பிரித்துக் கொடுக்கப்பட்டது. அக்காலத்திலே புலிகளுக்கு பெருமளவு ஆயுதங்கள் கிடைத்தன. ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்ததைக் கண்டு மக்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
25ம் திகதியின் பின் ஐ.தே.க. மீண்டும் பிளவுபடும் ஐ.ம.சு.முன்னணி பெரு வெற்றியீட்டும் என்றார்.இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறியதாவது, 1983 கறுப்பு ஜுலையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட களங்கம் நேற்று முன்தினம் அரசு மேற்கொண்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கையின் மூலம் துடைக்கப்பட்டுள்ளது.
வன்னியில் சிக்கியுள்ள மக்களை அரசாங்கம் இனச் சுத்திகரிப்பு செய்யப் போவதாக சில அமைப்புகள் சர்வதேச ரீதியில் பொய்ப் பிரசாரம் செய்தன. ஐ.தே.க.வும் அதனை மேலும் தூண்டிவிட்டது.
ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் படையினரால் மீட்கப்படுவதை வெளிநாட்டுத் தூதுவர்கள் அலரி மாளிகையில் இருந்து நேரடியாக அவதானித்தனர். பொய்ப்பிரசாரங்களுக்கு இதனூடாக முடிவு கட்டப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாட்டை பாராட்டி ஐ.தே.க. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நோர்வே தூதரகம் மீதான தாக்குதலைக் கூட அது கண்டிக்கத் தவறிவிட்டது.
ஜனாதிபதியுடன் விவாதம் நடத்த வருமாறு ரணில் விக்கிரமசிங்க சவால் விட்டுள்ளார். ஆனால் அவர் தனது மனச்சாட்சியுடன் விவாதம் நடத்தட்டும். நாட்டுக்குச் செய்த துரோகம் காரணமாக அவருக்கு ஒருநாளும் நிம்மதியாகத் தூங்க முடியாது.தான் செய்த தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினால் ரணிலுக்கு மக்கள் மன்னிப்பு வழங்குவர் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சம்பிக ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் உதேசாந்த குணசேகர ஆகியோரும் உரையாற்றினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply