மே 18 அன்று தமிழர்கள் ஒருங்கிணைய முதலமைச்சர் வேண்டுகோள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள பத்திரிகைச் செய்தி:-
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி அளவில் ஏற்பட்ட எம் இனிய உறவுகளின் அநியாயமான உயிரிழப்புகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளே இம்மாதம் வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாகும். அந்த உயிரிழப்புக்கள் நடந்து 8 வருடங்கள் ஆகின்றன. அன்று குழந்தைகளாகவிருந்த இளம் சிறார்கள் இன்று இளையோராக உருமாற்றம் பெறும் நிலையில் உள்ளார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களில் கூட அன்று நடந்த பயங்கரமான நிகழ்வுகள் ஓரளவு வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.
சாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால். வெளியாரின் உள்ளீடுகள் தடுக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு, போர் நடைமுறைகளுக்கு முரண்பட்ட விதத்தில் போராயுதங்கள் பாவிக்கப்பட்டு கரவாக மக்களை அழித்தொழித்த சமரே முள்ளிவாய்க்கால். அப்பாவிப் பெண்கள், பிள்ளைகள்இ குழந்தைகள், வயோதிபர்களின் உயிர்களைக்காரணமின்றிக் காவிச் சென்றதே முள்ளிவாய்க்கால். வட கிழக்கு மாகாண மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப்பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எம் மக்களின் வரலாற்றில் ஒரு துக்க தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய தினமாகும். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவிலே உயிரிழந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை. நடந்தது சம்பந்தமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைப்பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் எம் மக்கள் உண்மையை அறிய ஆவலாக உள்ளார்கள்.
அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீட்சி அளித்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக் கூறலானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசத்தவர்களின் எதிர்பார்ப்பு. இலங்கை அரசாங்கம் இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசு முன்வருவதாகத் தெரியவில்லை. முன்னைய அரச தலைவர் சந்திரிக்கா அம்மையார் மட்டும் வெளிநாட்டு உள்ளடங்கலுடன் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்ற தமது தனியான கருத்தை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக்கொண்டுவர உதவி செய்யாது.
சிலர் இவ்வாறான பொறிமுறையை நாங்கள் வேண்டி நிற்பதன் நோக்கம் குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்று நம்புகின்றார்கள். அதனால் பெருந்தன்மையுடன் இரக்கம் காட்டி அதைப்பற்றி மறந்துவிடலாமே என்று கூறுகின்றார்கள்.இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் சொகுசாக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள். இது தவறு. இப்பேற்பட்ட விசாரணை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பன்னாட்டுச் சமூகத்திற்கு எடுத்துரைக்க உதவும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ் மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ளார்கள் என்பது சம்பந்தமான விடயங்கள் இவ்வாறான விசாரணைகள் வெளிக்கொண்டுவருவன. அத்துடன் நடந்தவை வெளிச்சத்திற்கு வந்தால் அவைதமிழ் மக்களின் நல்லதொரு அரசியல் தீர்வுக்கு முன்னோடியாக அமையக்கூடும். தமிழர்கள் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை இதுவரைகாலமும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த காரணங்களை எடுத்தியம்ப அவ்வாறான விசாரணைகள் வழிவகுப்பன. உண்மையான அதிகாரப்பரவலாக்கம் விரைந்து செயற்படவேண்டியதொன்று என்பதை அனைவரையும் அறிந்து கொள்ளச்செய்வன.
இன்று ஜனநாயக வழிமுறைகளில் மக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள். அடிதடி எடுத்தே ஒரு விடயத்திற்கு தீர்வு காணலாம் என்ற எண்ணம் போய் எம்மை நாமே வருத்தி அகிம்சை முறையில் போராடி வெற்றிகள் காணமுடியுமென்பதை எமது மக்கள் எடுத்துக்காட்டி வருகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் அந்தவகையிலே ஒருவிதப் போராட்டந் தான். அநியாயமாக கொலை செய்யப்பட்ட எம் மக்களை நாம்ஒன்றிணைந்து நினைவு கொள்வதன் மூலம் மக்களின் ஒரு பாரிய துயர அலையை உண்டுபடுத்துகின்றோம். இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒருமித்து மனதார கோரிக்கை விடுவது இங்கும் பிறநாடுகளில் வாழும் தமிழ்மக்களையும் மனதால் ஒன்று சேர்க்க உதவுகின்றது. எம் மக்களின் ஒற்றுமையே எமது கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களைச் செவிசாய்க்க வைக்கும். ஆகவே இம் மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, இன பேதமின்றி, வர்க்க பேதமின்றி, ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி எமது மக்கள் சேர்ந்து பங்குபற்ற வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் அத்துடன் நாட்டின் ஏனைய இடங்களில் வசிக்கும் தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழ்மக்களும் ஒன்று சேர்ந்து தமது துக்கத்தை வெளிப்படுத்தும் நாளாக அதை மாற்ற வேண்டும்.
எனவே இம்மாதம் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் கூடும் ஜனக்கூட்டம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்தும் அதே வேளை வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்ப்பேசும் மக்கள் ஆகியோர் காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்த வேண்டும் என்று தாழ்மையுடன் வடமாகாண முதலமைச்சர் என்ற முறையில் உங்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கின்றேன். வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது வசதிக்கேற்றவாறு மூன்று நிமிடநேர மௌன அஞ்சலியில் ஈடுபடலாம். ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்டும் போது எவ்வாறு மக்கள் எங்கெங்கு நிற்கின்றார்களோ அங்கு தனித்துநின்று நாட்டிற்குக் கௌரவத்தை அளிக்கின்றார்களோ அதேபோன்று வரும் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சகலரும் இருக்குமிடத்தில் சிரம் தாழ்த்தி 3 நிமிட நேரத்திற்கு இறந்த எம் உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். இந்தத் தினம் வரும் வருடங்களிலும் தமிழர்தம் துக்க தினமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். முடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு அன்று வந்து சேர்ந்திருந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன். பல இடங்களில் இருந்தும் மக்களை ஏற்றிவரப் பேரூந்துகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. பேரூந்தினுள் ஏறக்கூடிய இடங்களையும் நேரங்களையும் உங்கள் வடமாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply