இந்து சமுத்திர பொருளாதாரத்தை பேணுவதில் இலங்கை முக்கிய கவனம் : பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 

அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பலப்படுத்திக்கொண்டு இந்து சமுத்திரத்தின் பொருளாதாரக் கேந்திரமாக இலங்கையை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சீனாவின் பீஜிங் நகரில் நேற்று இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது கூறியதாவது:- கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக பூகோளப் பொருளாதாரம் மீண்டும் ஆசியாவை கேந்திரப்படுத்தியுள்ளது. இந்த வகையில் இலங்கையானது பல்வேறு நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டு தடைகளைக் கடந்து இந்து சமுத்திரத்தின் பொருளாதாரக் கேந்திரமாக இலங்கையை உருவாக்க செயற்படவுள்ளது.

 

பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிகும், முன்னேற்த்துக்கும் அடித்தளமாக இந்து சமுத்திரத்தின் சுதந்திர கப்பல் பயணம் அமைந்துள்ளது. இந்து சமுத்திரத்தின் நிரந்தர சமாதானமும் நிலையான தன்மையும் இதற்கு சாதகமாக அமைந்துள்ளது. அமைதியானதும் இராணுவத் தொடர்பற்ற உறவை வளர்த்துக் கொள்வதும் தடைகளின்றி பல்துறை வர்த்தகம் மற்றும் வாணிப நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தவும் இது பெரிதும் உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் முக்கிய இரு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதன் மூலம் அனைத்து மக்களினதும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்து சமுத்திரத்தை பொருளாதார கேந்திரமாக அமைப்பது இலங்கையின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு முக்கியகாரணியாக அமையும்.

 

இதன் மூலம் பெரும் பிரதிபலன்களை அடைய முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply