‘இலங்கைக்கு உதவ மோடி யார்?’
“சர்வதேச வெசாக் நிகழ்வில் பிரதான விருந்தினராக மாத்திரம் நாட்டுக்கு வருவதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 30ஆவது மாநிலமாக நினைத்துக்கொண்டே நாட்டுக்கு வந்து சென்றுள்ளார்” என, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிற்றக்கோட்டேயில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். “மேல் மற்றும் தெற்கு மகாணங்களில் மாத்திரம் நடைமுறையில் உள்ள அவசர அம்பியூலன்ஸ் சேவை, நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என்றும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் இந்திய பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார். “அவ்வாறான வாக்குறுதி அளிப்பதற்கும் இலங்கை தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு மோடிக்கு என்ன உரிமை உள்ளது? ” என கம்மன்பில கேள்வியெழுப்பினார்.
“டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையின் திறப்பு விழாவுக்கு மோடியை வரவேற்கும் நிகழ்வில் தனது இருபுறமும் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்க நடுவில் மோடி அமர்ந்திருந்தார். “இந்தியாவின் 30ஆவது மாநிலமாக இலங்கை. அதற்கான ஆளுநர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று கூறுவதைப்போன்றே, இந்தியப் பிரதமரின் உரை அமைந்திருந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம், அரசியல் நோக்கமற்றது என பலர் கூறியிருந்தனர். எனினும், இந்தியப் பிரதமர் மோடியின் உரையானது, இலங்கை-இந்தியாவின் அரசியல் சார்ந்ததாக அமைந்திருந்ததே தவிர, ஐக்கிய நாடுகளின் வெசாக் தினத்துக்கானதாக அமைந்திருக்கவில்லை. “அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீட்டு மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் குறித்து உரையாடி, கையெழுத்திடப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் மறைமுகமாக தலையீடு செய்துள்ளார்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply