சசிகலா புஷ்பா எம்.பி. அளித்த புகாரின்பேரில் கோகுல இந்திரா உள்பட 15 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

தவறாக சித்தரிக்கும் வகையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக சசிகலா புஷ்பா எம்.பி. அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட 15 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சசிகலா புஷ்பா எம்.பி. டெல்லியில் மந்திர் மார்க் போலீஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார். அதில், என்னை இழிவுபடுத்தும் நோக்கில் சிலர் சமூக வலைத்தளங்களில் என்னுடன் மற்றொரு எம்.பி. நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை கணினி மூலம் தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க.வில் நான் வளர்ந்து வந்ததால் அதை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டுள்ளனர்.

சிலரின் செயலால் மக்கள் பிரதிநிதியான என் பெயருக்கும், என் பெண்மைக்கும் களங்கம் விளைவிக்கும் முயற்சி நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், சசிகலா புஷ்பாவை கடந்த வாரம் நேரில் அழைத்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர், புகைப்பட ஆதாரங்கள், தொலைபேசி உரையாடல், சந்தேகப்படும் நபர்களின் பட்டியல் ஆகியவற்றை டெல்லி போலீசாரிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை, சசிகலா புஷ்பாவின் முன்னாள் உதவியாளர் பாலமுருகன், சாத்தான்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆனந்த்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் சின்னதுரை, பிரியங்கா, காவ்யா, ஜெயராம், ராமு, கண்ணன் உள்பட 15 பேர் மீது டெல்லி இணைய குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில், விரைவில் கோகுல இந்திரா, இன்பதுரை, ஆனந்தராஜ், பாலமுருகன் உள்ளிட்ட 15 பேரிடம் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply