சுப்ரீம் கோர்ட்டுடன் தொடர்ந்து மோதல்: ஜனாதிபதியை நாட இருக்கும் நீதிபதி கர்ணன்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் ஜனாதிபதியை சந்தித்து முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு கர்ணனுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டுருந்த போதிலும், அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், கர்ணன் சார்பில் வாதாடிய அவரது வழக்கறிஞர், கர்ணனுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள் ”உங்களது தரப்பு வாதங்களை ஊடகங்களுக்கு அளிக்க தயாரா?” என கேள்வியெழுப்பினர்.
”இம்மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ, அப்போது எடுத்துக் கொள்கிறோம். அவசரமாக விசாரிக்க முடியாது. கோர்ட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள்” என நீதிபதிகள் காட்டமான கருத்துக்களை தெரிவித்தனர்.
இதனால், அதிருப்தியடைந்துள்ள நீதிபதி கர்ணன், ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை சந்தித்து முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் சாசனத்தின் ஆர்டிக்கிள் 72 சட்டத்தில் ஒருவர் மீதான தண்டனையை குறைக்கவும், ரத்து செய்யவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply