தடையை மீறி ஈழப்போர் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்ற இளைஞர்கள் கைது
இலங்கையில் நடந்த ஈழப் போர் தொடர்பாக மே 17 இயக்கம் அறிவித்திருந்த நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்ற இளைஞர்கள் மற்றும் மே 17 இயக்கத்தினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த மே 17 இயக்கத்தினர் முயற்சிக்கலாம் என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.காந்தி சிலை, விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை மற்றும் மெரீனா கடற்கரையின் பல நுழைவாயில்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
மெரீனா கடற்கரை சாலையில் பல பகுதிகளிலும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மாலை நேரத்தில் மெரீனா கடற்கரையில் கருப்பு சட்டை அணிந்து வந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பதித்த டீ-சர்ட் அணிந்து வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிபிசியிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்ட போதிலும், நினைவேந்தல் நிகழ்வைக் நடத்த தாங்கள் முயற்சிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் மே 17 இயக்கத்தினரா என்று கேட்டதற்கு, மே 17 இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈழப்போர் தொடர்பான மற்ற ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தி கூறினார். போலீஸ் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்ற திரைப்பட இயக்குனர் கெளதமனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டதால், கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்த சிலர் முயன்றனர். முன்னதாக, ஈழப் போர் தொடர்பாக மே 17 இயக்கம் அறிவித்திருந்த நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்திருந்தது.
மே 17 இயக்கம், ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இது தொடர்பாக சனிக்கிழமையன்று காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2003ஆம் ஆண்டு முதல் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதைக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், மெரீனாவில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டங்கள் நடத்துவதோ, குழுமுவதோ சட்டவிரோதமென்றும் அதனை மீறிச் செயல்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply