தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவீடன் தூதுவரிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

சிறிலங்கா, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், சுவீடன் தூதுவருக்கு இரா.சம்பந்தன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக தகவல் வெளியிட்ட இரா.சம்பந்தன், வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியது அவசியம். காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மீள்குடியமர்வு பூர்த்தியடையவில்லை.

அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இராணுவப் பிரசன்னம் குறையவில்லை. காணாமல்போனோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்து 2 ஆண்டுகளாகி விட்டன. தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்துவிட்டார்கள். இனியும் அவர்களால் பொறுமையாக இருக்கமுடியாது.

அவர்களின் பிரச்சினைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும். அனைத்துலக சமூகம் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சுவீடன் தூதுவரிடம் தெரிவித்தேன் என்று குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply