பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஒருசில மணிநேரமே உள்ளது : ஜனாதிபதி

பயங்கரவாதத்தை ஒழித்து, ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன்னும் ஒருசில மணித்தியாலங்களே இருக்கின்றன. இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க சந்தர்ப்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எதிர்க்கட்சித் தலைவருடன் வெற்றுத்தனமான விவாதம் நடத்த எமக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிற்துறை மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், அதிகாரிகளுடனான சந்திப்பு இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது:

யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சிறிய பிரதேசத்திற்குள் எமது படையினர் உட்பிரவேசித்துள்ளனர். அங்கு பலாத்காரமாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் எமது பிரதேசங்களுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

முழு இலங்கையையுமே ஒன்றுபடுத்துவதற்கு இன்னமும் ஒருசில மணித்தியாலங்களே இருக்கின்றது. 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பை தேடி எம்மை நாடி வருவதையும் அவ்வாறு தப்பி வரும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதையும் என் கண்களால் பார்வையிட்டேன்.

தமது மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் உயிரிழந்து கீழே விழுவதை தமது கண்களால் பார்த்துக் கொண்டு வேதனையுடன் மக்கள் தப்பி வருகின்றனர். எமது பிரதேசங்களுக்கு வரும் மக்கள், படையினரை கட்டிப் பிடித்து அழுகின்றனர்.

இலட்சக் கணக்கான மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த விடுதலைப் புலிகளின் இறுதித் தருணம் வந்துவிட்டது. மூன்று தசாப்த காலமாக பயங்கரவாதிகளின் குண்டுகள் எங்கு வெடிக்குமோ என அச்சத்துடன் வாழ்ந்த வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply