பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் நிலை என்ன? அடுத்த வாரம் முடிவு செய்கிறார் டிரம்ப்
உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உட்பட 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.ஆனால், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இல்லை.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்று டிரம்ப் நினைப்பதால், இந்த ஒப்பந்தம் குறித்து அவரது நிர்வாகம் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எனவே, இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகக் கூடாது என டிரம்பின் கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த 36 செனட் சபை எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். சில எம்.பி.க்கள் வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து வரும் டிரம்ப் நிர்வாகம், ஒப்பந்தத்தை ஏற்பதா அல்லது விலகுவதா? என்பது பற்றி ஆலோசித்து வருகிறது.
இந்த சிக்கலான சூழ்நிலையில், பாரிஸ் ஒப்பந்தம் தொடர்பாக அடுத்த வாரம் இறுதி முடிவை எடுக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இத்தாலியின் சிசிலியில் இருந்து டுவிட்டர் மூலம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply