இலங்கை சிங்கள நாடு என்பதை ஏற்காமல் மனோவால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது :பொதுபல சேனா
இலங்கை சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள அமைச்சர் மனோ கணேசன் மறுக்கின்றார். எனவே அவரால் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாதென பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் ஸ்ரீ சத்தர்மாராஜித விஹாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தாம் இருவரும் பண்டாரநாயக்க கொள்கைகளுக்கு அமைவாகவே செயற்படுவோம் என்று பல சந்தர்ப்பங்களிலும் கூறியுள்ளார்கள். அதன் பிரகாரம் நடந்து கொண்டும் உள்ளனர்.
பண்டாரநாயக்க எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் இந்த நாட்டை சிங்கள பெளத்தநாடு என ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என அரசாங்கத் தரப்பிடத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதனை அவரின் மகளான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறந்துவிட்டார்.
அவ்வாறிருக்கின்ற போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்க கொள்கைகளை மறக்காமல் செயற்படுவதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் பண்டாரநாயக்க கொள்கையை பின்பற்றுவதையிட்டும் பாராட்டுகின்றோம்.
அதன் பிரகாரம் அவர்கள் இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்பதை பல இடங்களிலும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.
ஆனால் இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்கின்ற வார்த்தையே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஒவ்வாமையாக உள்ளது. அவர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார்.
அவ்வாறிருக்கின்ற போது அமைச்சர் மனோ கணேசன் இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். அதனால் அவரால் ஒருபோதும் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply