வவுனியா மருத்துவர் முகமட் மீரா மொகைதீன் கொலைக்குக் காரணமானவர்களைச் சட்டத்துக்கு முன்னால் நிறுத்துக: ஈபிடிபி
வவுனியா பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் மருத்துவ நிபுணர் முகமட் சுல்தான் மீரா மொகைதீன் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியதாகும்.
கொலைக் கலாசாரம் முடிவுக்கு வருவதாக மக்கள் நம்பும் இத்தருணத்தில், தொடருகின்ற படுகொலைகள் எமது மக்களின் அமைதியான வாழ்வுக்கு எதிரான சம்பவங்களாகவே உள்ளது.
பெருந்தொகையான எமது மக்கள் இடம் பெயர்ந்து பல விதமான நோய்களுடனும், காயங்களுடனும் வருகையில், மருத்துவத் தேவை இன்றியமையாததாகிறது. வைத்தியர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த சேவை மிக அவசியமாகும். இவ்வாறானதொரு அவசியமான பொழுதில் டாக்டர் மொகைதீன் அவர்கள் மீதான படுகொலையும், அதனால் வைத்தியர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமும் நாகரிகமான சமூகத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல.
எமது மக்களை அநாதரவாக்கிய கொலைக்கலாசாரமும், கொலைக் கருவிகளின் உபயோகமும், அருவருக்கத்தக்கதாகும். அவற்றால் எமது மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுத் தர முடியாது என்பதை வரலாறு எமக்குத் தெளிவு படுத்தியுள்ளது.
டாக்டர் மொகைதீன் அவர்களின் இழப்பால் துயருற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதேவேளை கொலைகளுக்குக் காரணமானவர்களைச் சட்டத்துக்கு முன்னால் நிறுத்தி உரிய தண்டனை வழங்கப்பட பொலிஸார் நடவடிக்கை எடுப்பதோடு, சக வைத்தியர்களிடத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டுள்ள அச்சமும் பதற்றமும் நீங்கி இயல்பு நிலை திரும்பவும் வழி செய்ய வேண்டும்.
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply