பெரும்பான்மையை நிரூபிக்க விக்கிக்கு ஆளுநர் அழைப்பு
வட மாகாண சபையில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனைக் கோரவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று தெரிவித்தார். முதலமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பரிசீலித்து அந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளோர் யார் என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எழுத்து மூலம் கோரவுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இந்த கோரிக்கைக்கு இணங்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபிப்பாரானால் அவரே முதலமைச்சராக இருப்பார். அவ்வாறில்லாத பட்சத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவர் வட மாகாண சபை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று மேலும் தெரிவித்த ஆளுநர் குரே; நேற்று முன்தினம் வட மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேர் கையொப்பமிட்ட முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்னிடம் கையளிக்கப்பட்டது. சபைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் உட்பட வட மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வந்து அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை என்னிடம் கையளித்தனர்.
அதில் கையொப்பமிட்டுள்ளவர்கள் மற்றும் அதன் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்திய பின் மாகாண சபையின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நான் முதலமைச்சரைக் கோரவுள்ளேன். மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை கையொப்பமிட்டுள்ளோரை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களிடம் சத்தியக் கடதாசி பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை; தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா நேற்று மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் முதலமைச்சர் விக்னேஷ்வரன் சார்பிலும் சிலர் ஆளுநரைச் சந்தித்ததாக வட மாகாண சபைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் தெரிவித்தார். இதேவேளை; அடுத்த முதலமைச்சர் தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் சிலர் எழுப்பியுள்ள கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா; பதிலளிக்கையில்; ஆளுநரின் வேண்டுகோளையடுத்தே அவரை சந்தித்துப் பேசியதாகவும் அடுத்த முதலமைச்சர் தொடர்பில் தாம் அன்றி கட்சியின் செயலாளரே முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ; நேற்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கட்சியின் அனைத்து முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் இடமட்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனும் கலந்துகொண்டாஇக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிவிப்பதாகவும் மாவை சேனாதிராஜா எம்.பி. வட மாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. முதலமைச்சருக்கு ஆதரவானவர்கள் மற்றும் எதிரானவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றும் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply