புலிகளின் முக்கிய தளபதிகள் இராணுவத்திடம் சரண் அடையத் தயார்.
கேர்னல் பானு உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் படையினரிடம் சரணடைய ஆயத்தமாக இருக்கின்ற போதும் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோரின் அழுத்தம் காரணமாக இவர்கள் சரணடையாமல் உள்ளனரென 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார். புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோர் மக்களோடு மக்களாக புதுமாத்தளன் பாதுகாப்பு வலய பகுதியிலேயே இன்னமும் உள்ளனர் என்பது தயா மாஸ்டரின் வாக்குமூலம் ஊடாக ஊர்ஜித மாகியிருக்கிறது என்றும் பிரிகேடியர் சவேந்திர டி சில்வா தெரிவித்தார்.
முல்லைத்தீவு, புதுமாத்தளனிலுள்ள 58வது கட்டளையிடும் தளபதியின் அலுவலகத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே பிரிகேடியர் சவேந்திர சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
படையினரிடம் சரணடைந்த புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பாக புலிகளின் தலைமையின் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் அழுத்தம் காரணமாக தமது வாழ் நாளில் பொய்பேச வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப் பட்டதாகவும் இதனால் தாம் மிகவும் மனம் வருந்து வதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் மட்டுமல்ல அவரது புதல்வர் சார்ள்ஸ் அன்டனியும் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இருப்பதாகக் கூறிய தயா மாஸ்டர் இறுதி நேரத்தில் பிரபாகரன் தப்பிச் சென்றுவிடுவார். போராட்டத்தில் இறுதிவரை நின்று உயிரிழக்க மாட்டார். அவர் இவ்வாறான மனப்பான்மையை கொண்டவர் என்றும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா கூறினார்.
இதேவேளை, பிரபாகரன் இறுதிநேரத்தில் தப்பிச் செல்வதற்காக இன்னுமொரு நீர்மூழ்கியை வைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்கியுள்ள புதுமாத்தளன் பகுதியின் தென்முனைப் பகுதியிலிருந்து எதிர்முனைக்கு கனரக ஆயுத ங்களினால் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்முனையினூடாக மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிடக் கூடாது என்பதாலேயே இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறிய பிரிகேடியர் சவேந்திர சில்வா, எனினும் படையினர் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தியே எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேறும் மக்களின் நலன் கருதியே இவ்வாறு எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகிறது என்றும் பிரிகேடியர் கூறினார்.
புலிகள் அனைவரும் இறுதி வரை போராட வேண்டும் என்றும் அனைவரும் சிவில் உடையில் நின்றே போராட வேண்டும் என்றும் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply