ஐ.நா. அனுப்பும் 5000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு விரைவில் வரும்.

இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியாக வழங்குவதற்குத் தேவையான 5,000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த வார இறுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக கூடாரங்கள், உள்ளிட்ட 5,000 மெற்றிக்தொன் உடனடி அத்தியாவசியப் பொருள்கள் டுபாயிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும், இந்த நிவாரணங்கள் வவுனியா, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களிலுள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுமெனவும் யு.என்.எச்.சீ.ஆர். தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்ததைவிட அதிகமான மக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயர்ந்திருப்பதால் அவர்களுக்கான நிவாரணங்களையும், உடனடித் தேவைகளையும் நிறைவேற்றுவதில் அரசாங்கமும், அரசசார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன.

இடம்பெயர்ந்த மக்களை வவுனியாவில் தங்கவைப்பதற்குப் போதியளவு இடவசதிகளைச் செய்துகொடுப்பதிலும், அவர்களுக்கான குடிநீர் மற்றும் நீர் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் உணவின்றி பட்டினியில் இருப்பதுடன், அவர்களுக்கு வழங்குவதற்குப் போதுமான உணவுப் பொருள்கள் உரிய தரப்பினரிடம் இல்லையென அரசசார்பற்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு வலயத்தில் 60,000-70,000 பேர் வரையான பொதுமக்களே இருப்பதாக அரசாங்கம் முன்னர் கூறிவந்த நிலையில் எதிர்பாராத விதமாக அங்கிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியிருந்தனர். இன்னமும் அங்கு 25,000 பேரே எஞ்சியிருப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது. எனினும், அங்கிருக்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply