இலங்கையில் 48 மணி நேரத்தில் நல்லது நடக்கும் : சிதம்பரம்
“இலங்கையில் நடைபெறும் போர் முடிவுக்கு வந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். இலங்கையில் சகஜநிலை திரும்பவும், போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை இந்தியா வைத்துள்ளது. அதில் நல்ல முடிவு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்னும் 24 அல்லது 48 மணி நேரம் வரை என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நம்பிக்கை வெளியிட்டார். “பிரபாகரனுக்கு கெட்டது நடக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்ன செய்து கொள்வார் என்பது எனக்கு தெரியாது” என்றும் அவர் சொன்னார்.
“இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர். இதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. அனைவருக்குமே தெரியும், இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களைப் பாதுகாப்பதற்கும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது” என்று கூறிய அவர், “இலங்கை ஒரு தனி நாடு, எனவே நாம் அதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்”என்றும் குறிப்பிட்டார். சிவகங்கையில் செய்தியாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்கள் குண்டு வீசும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அவர்களின் மறுவாழ்வுக்கு வேண்டிய ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து கொடுக்கும். பிரபாகரனுக்கு இந்தியா அடைக்கலம் தருவது குறித்து நான் கருத்து கூறமுடியாது. ஏன் என்றால் இங்கு சட்டங்கள் உள்ளதன. மேலும் இலங்கை பிரச்சினையில் மத்திய மாநில அரசுகளுக்கு கருத்து வேறுபாடு கிடையாது” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply