2014-ம் ஆண்டிலிருந்து 27 ரெயில் விபத்துக்களில் 259 பேர் மரணம் – மோடியை தாக்கும் காங்கிரஸ்
நரேந்திர மோடி 2014-ம் ஆண்டில் பிரதமரான பின்னர் ரெயில் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாததால் 27 ரெயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 259 பயணிகள் மரணமடைந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபர்நகரின் கடாவுளி பகுதியில் பூரி-ஹரித்வார்-கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டியின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ரெயிலானது ஹரித்வாரில் இருந்து பூரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 400-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, “ மோடி பிரதமராக பதவியேற்றது முதல் இதுவரை 27 ரெயில் விபத்துக்களில் 259 பேர் மரணமடைந்துள்ளனர். 899 பேர் காயமடைந்துள்ளனர். எப்போது அரசு விழித்துக்கொள்ளும் என தெரியவில்லை?” என தெரிவித்துள்ளார்.
மேலும், “ விபத்துக்கள் நிகழ்வதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற விபத்துக்கள் நடப்பதை தடுக்க என்ன மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply