ஆளுநருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு: முதலமைச்சரை மாற்றக்கோரி கடிதம் அளித்தனர்

அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விழா நடந்த அதே சமயத்தில் டி.டி.வி.தினகரன் வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திரண்டு ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சில நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் ஆளுநரை இன்று காலை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆளுநரை சந்திப்பதற்கு முன்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் அங்கிருந்து அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அப்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால், இணைப்புக்கு பின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், காலை சரியாக 10 மணிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்குள் சென்றனர். ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிகிறது. அப்போது ஆளுநரிடன் தங்களது கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் கென்னடி, முதலமைச்சர் பழனிசாமி சரிவர செயல்படாததால், அவரை மாற்ற ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றார். அதேபோல், முதலமைச்சரை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. ஜக்கையன் கூறுகையில், ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, எங்கள் பலம் இன்று தெரியவரும் என்று கூறினார்.

இதற்கிடையே, பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்திப்பதற்காக கவர்னர் மாளிகைக்குள் சென்றார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply