பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

இதனிடையே, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்து இருந்தார். அவரது மனுவை கடந்த ஜூன் 21-ம் தேதி, தமிழக அரசு நிராகரித்தது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து, அவரது தாயார் பேரறிவாளனை பரோலில் விடுமாறு தமிழக அரசுக்கு மனு அனுப்பி இருந்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர், பேரறிவாளனுக்கு பரோல் அளித்துள்ளார்.

பேரறிவாளன் பரோலில் வெளியே வர தமிழக அரசு இன்று, அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையை, அவர் அடைக்கப்பட்டிருக்கும் வேலூர் சிறைக்கு அரசு அனுப்பி வைத்துள்ளது. இதன்மூலம், பேரறிவாளன் ஜெயிலில் இருந்து ஒரு மாத பரோலில் வெளியே வர உள்ளார்.

அரசின் இந்த முடிவுக்கு பேரறிவாளன் தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அதிகாரப்பூர்வ அறிவிப்பு எனக்கு வரவில்லை. என் மகனை காண 26 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். ஒரு மாத காலம் பரோல் கேட்டிருந்தேன். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி”, என கூறினார்.

“பேரறிவாளன் ரத்தக்கொதிப்பு காரணமாக 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது தந்தையின் உடல்நிலை காரணமாகவே பரோல் கிடைத்துள்ளது”, என பேரறிவாளன் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply