லெபனான் எல்லையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த இடங்களை ஹெஸ்புல்லா படையினர் மீட்டனர்
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமை பீடமாக கருதப்படும் டேய்ர் அல்-ஸோர் மாகாணத்தின் அருகாமையில் உள்ள ஹோம்ஸ் மாகாணத்தில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சுக்னா நகரை சிரியா ராணுவ வீரர்கள் முழுமையாக மீட்டனர்.
இந்நகரை மீட்பதற்காக நடைபெற்ற உச்சகட்டப் போரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களை குவித்து வைத்திருந்த கிடங்குகள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன.
அங்கிருந்து தப்பிச் சென்ற தீவிரவாதிகள் சிரியா மற்றும் லெபனான் நாட்டு எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ள நிலையில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை தீர்த்துகட்டும் போர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாக சிரியா அரசு அறிவித்திருந்தது.
சிரியா படைகளுடன் லெபனானை சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிகளும் கடந்த வாரம் இணைந்து உள்நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் களமிறங்கி உள்ளனர். அதேவேளையில், சிரியா படைகளுடன் சேராமல் லெபனான் நாட்டு எல்லைப்பகுதியில் அந்நாட்டு ராணுவம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களை குறிவைத்து ஆவேச தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சிரியா-லெபனான் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள கலாமோன் பகுதிக்குள் முன்னேறிச் சென்ற ஹெஸ்புல்லா கூட்டுப் படையினர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 270 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலப்பகுதியை கைப்பற்றியுள்ளனர். மீதியுள்ள 40 சதுர கிலோமீட்டர் பகுதியையும் மீட்பதற்காக உச்சகட்ட தாக்குதல் நடைபெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply