அரசியல் களத்தில் தனக்கென தனியிடம் பிடித்த அஸ்வர்
பாராளுமன்றில் எதிர்த்தரப்பினரின் வாதங்களை தனது வாதத்திறனால் இலாவகமாக முறியடித்து அரசியல் களத்தில் தனக்கென தனியிடம் பிடித்துக்கொண்ட கம்பீரமான அக்குரலோசை நேற்றுடன் அமைதி பெற்று விட்டது. எனினும் அக்குரலோசையின் இங்கிதத்தை எவராலும் வெகு சீக்கிரத்தில் மறந்து விடமுடியாது.
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் இலங்கை முஸ்லிம்களால் மாத்திரமல்லாது சகல சமூகத்தினராலும் மறக்க முடியாத ஒருவர். அவர் அரசியல்வாதி எனும் சொற்பிரயோகத்திற்குள் மட்டுப்பட்டு விடாது சகல துறைகளிலும் தனது ஆளுமையினை ஆழ வேரூன்றியுள்ளார். அதனால்தான் அவர் நாட்டிலுள்ள சகல மக்களாலும் அறியப்பட்டவராக உள்ளார்.
இலங்கை அரசியல் புலத்தில் பொதுவாக அரசியல்வாதிகளில் அதிகளவாேனார் “அரசியல்” என்கின்ற துறையுடன் சுருங்கியுள்ளனர். எனினும் முன்னாள் அமைச்சர் அஸ்வர் அவ்வாறானவர் அல்ல, அவர் பல துறைகளிலும் தனது அவதானத்தை செலுத்தியிருந்தார்.
அவரது மொழியாற்றல், கணீர் என்ற சொற்பிரயோகம், துடிப்பான செயற்பாடு மற்றும் மக்களுடன் பேணும் நல்லுறவு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு அப்போதைய ஆட்சியாளர்கள் அவரை அரசியலுக்குள் வரவழைத்து அவர் மூலம் மக்களுக்கு சேவை வழங்குவதற்கு வழிசெய்தனர். எனவே அவர் ஏற்றுக்கொண்ட தமது பொறுப்பினை முடியுமானவரையில் மக்களுக்கு ஆற்றியுள்ளார் என்றே குறிப்பிட வேண்டும்.
அவர் அதிகாரமுள்ள அரசியல்வாதியாக பதவி வகித்த போதிலும் மக்களுடன் எவ்வித அதிகாரத்தோறணையுடனும் அணுகாது மிகவும் பணிவான முறையில் தனது வாழ்க்கையினை அமைத்துக்கொண்டிருந்தார். அரசியலுக்கு அப்பால் அவரது பிரத்தியேக வாழ்க்கையும் மிகவும் சாதாரணமாக அமைந்திருந்தது. அவரது வீடே ஒரு நூலகம் போல் அமைந்திருந்தது. மேலும் அங்குள்ள சகல நூல்களையும் அவர் படித்துள்ளமை அவதானத்திற்குரிய ஒன்றாகும்.
1937 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி பிறந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலைக் காலத்திலேயே சிறந்து விளங்கியதுடன் பலதுறைகளிலும் தனது காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். அத்துடன் பாடசாலைக்காலத்தில் பேச்சுப் மற்றும் விவாதப் போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளார்.
மேலும் அக்காலப்பிரிவிலேயே பல்வேறு மொழிகளைக்கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் அவரிடம் காணப்பட்டதுடன் அதில் மிகுந்த அவதானமும் செலுத்தியுள்ளார். பாடசாலைக்கல்வியின் பின்னர் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் சேர்ந்து மார்க்கக் கல்வி பயின்றுள்ளார். பின்னர் அப்பிரதேசத்திலுள்ள தேரர் ஒருவரிடம் பாளி மொழியையும் கற்றுக்கொண்டுள்ளார்.
எனவே தனது கல்வி நடவடிக்கைகளை முடித்துக்கொண்ட பின்னர் மஹரகம செய்தியாளராக பத்திரிகைத்துறையில் தொழிலை ஆரம்பித்துள்ளார். நீண்ட காலம் அத்துைற யில் ஈடுபட்டு ஊடகத்துைறக்கு மிகுந்த பங்காற்றியுள்ளார். மேலும் அக்காலப்பிரிவிலேயே அவர் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் முன்னாள் சபாநாயகர் பாக்கீர்மாக்காரின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அப்போதுமுதல் அரசியலில் சிறிதாக ஈடுபடுவதற்கு ஆரம்பித்துள்ளார். எனினும் நேரடியான அரசியல் வாழ்க்கையினை 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சமசமாஜக் கட்சியூடாகவே ஆரம்பித்துள்ளார். அக்கட்சியில் இணைந்து செயற்பட்ட காலத்தில் பல்வேறு மக்கள் உரிமைப் போராட்டங்களிலும் துடிப்புடன் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அவரது அரசியல் செயற்பாடுகளை அவதானித்த ஐக்கிய தேசியக்கட்சியின் அப்போதைய தலைவர்கள் அவரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். எனவே அவர் 1955 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தொடங்கினார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மிகுந்த விருப்பைப்பெற்ற அவர் பிரேமதாஸவின் பிரத்தியேக மொழிபெயர்ப்பாளராக நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார்.
பின்னர் 1989 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்குத் தெரிவானார். மேலும் நீண்ட காலம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்த அவர் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சு, பாராளுமன்ற விவகார அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.
அவர் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் முஸ்லிம்களின் விடயத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டிருந்தார். அக்காலப்பகுதியிலேயே தேசிய மீலாத் விழாவை ஆரம்பித்து அதற்கென அரசாங்கத்திடமிருந்து நிதியொதுக்கீட்டையும் பெற்று முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான வழிவகைகளையும் மேற்கொண்டிருந்தார். அதனாலேயே இன்றும் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பின்னர் 2008 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சேர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக மீண்டும் பாராளுமன்றிற்குத் தெரிவானார். மேலும் அக்காலப்குதியில் ஊடகத்துறை தொடர்பான கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் கடமையாற்றினார்.பின்னர் 2014 அம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமாச் செய்தார். அத்துடன் அவர் இறக்கும்வரை கூட்டு எதிர்க்கட்சியின் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் பெயலதிபராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, ஆர்.பிரேமதாஸ, டி.பி. விஜயதுங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர்களுடன் நெருக்கமான உறவுபேணியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாராளுமன்றின் நிலையியல் கட்டளைகள் மற்றும் இதர விவகாரங்களில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர். அத்துடன் பாராளுமன்றிலுள்ள அனைத்து துறைசார்ந்த குழுக்களிலும் அங்கம் வகித்துள்ளார். சகலவிதமான விவாதங்களிலும் கலந்து தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கலை இலக்கியத் துறையிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் “வாழ்வோரை வாழ்த்துவோம்” எனும் மகுடத்தின் மூலம் ஏராளமானவர்களை கெளரவித்து கலைஇலக்கியவாதிகளின் நன்மதிப்பையும் வென்றுள்ளார். மேலும் ஊடகங்களின் கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயற்பட்டமையும்குறிப்பிடத்தக்கது.
மேலும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தலைவராகவும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் உபதலைவராகவும் நீண்ட காலம் பதவி வகித்து பல்வேறு சேவைகளைச் செய்துள்ளார். மேலும் மரணிக்கும் வரையில் குறித்த அமைப்புகளின் ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார்.
செனட்டர் மஷூர் மெளலானா, முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீட் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உட்பட பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவர் மரணிக்கும்போதும் சில நூல்களை வெளியிடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் கிராமங்களின் வரலாறுகள் பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ளதுடன அதுபற்றிய உரைகளையும் ஆற்றியுள்ளார். மேலும் முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடனும் சிறந்த உறவைப்பேணி வந்துள்ளார்.
அத்துடன் நாட்டில் அவ்வப் போது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த நெருக்கடிகளின் போதும் அதற்கெதிராக குரல் கொடுத்ததுடன் அதனை ஆட்சியாளர்களின் கவனத்திற் கொண்டுவருவதிலும் மிகுந்த பங்காற்றியுள்ளார்.
எனவே இவ்வாறான பல சேவைகளை ஆற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எச்,எம்.அஸ்வரின் மறைவு நாட்டு அரசியலில் வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளமை தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply