விஜயகலாவே என்னை காப்பாற்றினார்! வித்யா வழக்கில் திடீர் திருப்பம்!

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுண்ட பின்னர் யாழ். வேலணை மக்கள் தன்னைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த போது, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே தன்னை காப்பாற்றி குடும்பத்திடம் ஒப்படைத்தார் என வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று ஆரம்பமாகி தொடர்ந்து இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்றைய சாட்சியப்பதிவின் போதே சுவிஸ்குமார் மன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பொலிஸார் தனது தம்பியை கைதுசெய்தமை தொடர்பாக முறையிடுவதற்கு யாழ்ப்பாணம் சென்றபோதே, மக்கள் தன்னை வழிமறித்து தாக்கியதாக சுவிஸ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் அங்கு வந்த விஜயகலா, தனது கட்டை அவிழ்த்து விடுமாறு மக்களிடம் கோரியதாகவும், குடும்பத்தார் வரும்வரை அங்கேயே சுமார் இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்ததாகவும் மன்றில் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கு விசாரணையில் ஏற்கனவே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் விஜயகலாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்திருந்தனர்.

இதன்போது, சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காகவே விடுவிக்குமாறு மக்களிடம் கோரியதாக விஜயகலா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply