யாழ். மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் புதிய தகவல்
யாழ். சிறுதீவு கடலில் படகு மூழ்கி ஆறு மாணவர்களின் உயிரிழப்பு குடாநாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் மது அருந்தியமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி இருந்தன.
எனினும் ஆறு மாணவர்களும் நீரில் மூழ்கியதனாலேயே உயிரிழந்துள்ளார்கள் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆறு மாணவர்களும் மது அருந்தியிருந்தார்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மது அருந்தியுள்ளார்களா? என அறிந்து கொள்ள மாணவர்களின் உடல் கூறுகள் எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியலிங்கம் மேலும் கருத்து வெளியிடுகையில்,
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய மாணவர்கள் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளார்கள் என்பது சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் உயிரிழந்த மாணவர்களின் உடல்கூற்று மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவர்கள் இறப்பதற்கு முன்னர் ஏதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை அறிந்து கொள்வதற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே அவர்கள் ஏதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை உறுதியாக வெளிப்படுத்த முடியும் என கூறினார்.
இதேவேளை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 2 மாணவர்கள் சிறுதீவு இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்த்து கொண்டு கடலுக்குள் செல்ல முயன்றதாகவும், அதன் பின்னர் மற்றவர்கள் அதில் ஏறியதாகவும், பின்னர் கடலுக்குள் சென்றதும் படகு கவிழ்ந்து மாணவர்கள் தண்ணீருக்குள் மூழ்கியதாகவும் அவர்களுக்கு நீச்சல் தெரியாது எனவும் சம்பவ இடத்திலிருந்த மற்றைய மாணவர்கள் கூறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply