யாழ் குடாநாட்டு முகாம்களில் இடப்பற்றாக்குறை
வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 17 ஆயிரத்திற்கும் அதிக மானவர்கள் யாழ் குடாநாட்டிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப் பட்டிருப்பதால் அங்கு இடநெருக்கடி காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களிலேயே தங்கவைக்கப்பட்டிருப்பதால் மலசலகூடம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் தட்டுப்பாடாகவே காணப்படுகிறது.
குறிப்பாகப் பாடசாலைகளில் குறிப்பிட்டளவு மலசல கூடங்களே அமைக்கப்பட்டிருப்பதால் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்கள் தண்ணீர் கொண்டுசெல்ல வாழிகள் இன்றி பொலித்தீன் பைகளில் தண்ணீருடன் மலசலகூடங்களுக்குச் செல்ல நீண்ட வரிசையில் காத்துநிற்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேநேரம், இண்டாம் தவணைக்காக யாழ் குடாநாட்டுப் பாடசாலைகள் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பாடசாலைகள் சில அருகிலுள்ள தனியார் கல்வி நிலையங்களில் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், முகாம்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் தங்கவைக்கப்பட்டிருப்பதால் சுகாதார வசதிகள் மற்றும் மலசலகூடங்களைச் சுத்தம் செய்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது எனக் கூறப்படுகிறது.இதேவேளை, யாழ் குடாநாட்டிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு உணவளிக்க நாளாந்தம் தலா 150 ரூபா தேவையெனக் கணக்கிடப்பட்டுள்ளது. அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளபோதும் பெரும் எண்ணிக்கையானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதால் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இணைந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றன.
முகாம்களில் உள்ளவர்கள் குழுக் குழுவாகப் பிரிக்கப்பட்டு உணவைச் சமைத்து உண்பதாகவும், எனினும், மரக்கறிகள் மற்றும் மீன்களை விநியோகிப்பதில் ஏற்படும் காலதாமதத்தால் மாலை நான்கு மணிக்கே அவர்களால் மதிய உணவை உண்ணக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ் குடாநாட்டில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 17,000ற்கும் அதிகமான மக்கள் கொடிகாமத்துக்கு அருகிலுள்ள அல்லரைப் பகுதியிலுள்ள முன்னர் இராணுவ ஆட்லறித் தளம் அமைந்திருந்த 1000 ஏக்கர் நிலப்பரப்பில் முகாம்கள் அமைத்து தங்கவைக்கப்படவுள்ளனர். முதற்கட்டமாக அந்தப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply