மனைவியை வன்புணர்வு செய்து, குழந்தையைக் கொன்ற தாலிபன்கள்: விடுதலையான பணயக்கைதியின் வாக்குமூலம்

தாலிபன்களால் ஐந்து ஆண்டுகளாக குடும்பத்துடன் பணயக் கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்து விடுதலையான கனடா நாட்டுக்காரர் தாலிபன்கள் தமது மனைவியை வன்புணர்வு செய்ததாகவும், தன் மகளை கொன்றுவிட்டதாகவும் புகார் கூறுகிறார். பாகிஸ்தான் படையினரால் விடுவிக்கப்பட்டு, தமது மனைவி கெய்ட்லான் கோல்மேன் மற்றும் குழந்தைகளுடன் கனடா திரும்பியவுடன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷுவா போயில் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

ஜோஷுவா- கெய்ட்லான் தம்பதியர் கடந்த 2012ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார்கள். ஐந்தாண்டுகள் பணயக் கைதியாக இருந்தபோதே அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன. தாலிபன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியில் இருந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை அளிக்க முயற்சித்தபோது தாங்கள் கடத்தப்பட்டதாகவும், தன்னார்வ தொண்டர்களோ, உதவிப் பணியாளர்களோ, அரசாங்கமோ தாங்கள் கடத்தப்பட்டபோது உதவிக்கு வரமுடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்டபோது கோல்மேன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தற்போது அவர்களோடு திரும்பி வந்துள்ள மூன்று குழந்தைகளுமே அவர்கள் தாலிபன்களின் பிடியில் இருந்தபோது பிறந்தவைதான். மூவரில் இளைய குழந்தைக்கு தற்போது உடல் நலமில்லை என்று தெரிகிறது.தங்களுக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், அது தங்களைப் பிடித்துவைத்திருந்த தாலிபன்-ஹக்காணி கூட்டணியினரால் கொல்லப்பட்டதாகவும், தனது மனைவியை தாலிபன்கள் வன்புணர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் சொன்ன ஒன்றை தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கான தண்டனையாக அவர்கள் இதைச் செய்தனர்.

ஒரு யாத்ரீகரை பணயக் கைதியாகப் பிடித்தது, அவரது பிஞ்சுக் குழந்தையைக் கொன்றது, ஒரு ‘தளபதி’ மேற்பார்வை செய்ய, ‘கேப்டன்’ ஒருவர் உதவி செய்ய, காவலாளி ஒருவரால் அவரது மனைவியை வன்புணர்வுக்கு ஆளாக்குவது ஆகியவை ஒன்றை ஒன்று விஞ்சுகிற முட்டாள்தனம், தீமை என்றார் அவர். பாகிஸ்தான் படையினரால் விடுவிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அமெரிக்க ராணுவ விமானத்தில் ஏறுவதற்கு போயில் மறுத்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

போயில், இதற்கு முன்னர் ஒரு தீவிர இஸ்லாமியவாத கருத்துகளைக் கொண்ட ஒரு பெண்ணை மணந்தார். அவர் முன்னர் குவாண்டனாமோ பே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒமர் காதரின் சகோதரி ஆவார். சி.என்.என் தொலைக்காட்சி, அவர் தன் மீது அமெரிக்க அதிகாரிகள் வழக்கு தொடுப்பார்கள் என்று பயப்படுவதாக தெரிவித்திருந்தது.

கனடா வந்தவுடன் அத்தகவல்கள் அபத்தமானவை என்று போயில் கூறினார்.

கொடூரமான சோதனைகளை மறந்துவிட்டு, உயிரோடு எஞ்சியுள்ள எங்கள் மூன்று குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply