இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க சொன்னது தேர்தல் கமி‌ஷன் விசாரணையில் பதிவாகி இருக்கிறது

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தல் கமி‌ஷன் விசாரணைக்கு பின்னர் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தேர்தல் கமி‌ஷன் விசாரணையின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்க சொல்லி நாங்கள் வேண்டுகோள் விடுக்கவில்லை.

நாங்கள் ஏற்கனவே நிறைய பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தோம். தேர்தல் கமி‌ஷன் திடீரென்று வேறு புதிதாக பிரமாண பத்திரங்களை கேட்டது. ‘‘எதிர் அணியினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதில் உள்ள குளறுபடிகளை கண்டுபிடிக்க எங்களுக்கு மேலும் அவகாசம் தேவை. உடனடியாக நீங்கள் ஏதாவது முடிவு எடுத்தால் அது சரியானதாக இருக்காது’’ என்றுதான் நாங்கள் கூறினோம்.

மற்றபடி இரட்டை இலை சின்னத்தை நாங்கள் முடக்க சொன்னதாக கூறுவது தவறானது ஆகும்.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

ஒன்றுபட்ட அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

சசிகலா தரப்பில் அவர்கள் எந்த பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை. ஆனால் நாங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 6 பேருடைய கையெழுத்தில் குளறுபடி இருப்பதாக வாதம் செய்தார்கள். இறுதியாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு தியாகங்களை செய்து இந்த இரட்டை சின்னத்தை நிலை நிறுத்தினார்கள். இந்த சின்னத்தை முடக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் உண்மையான அ.தி.மு.க. விசுவாசிகளாக இருக்க முடியாது. எனவே எப்போது தீர்ப்பு வழங்கினாலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘நாங்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்க சொல்லி கேட்கவில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறுகிறாரே’’ என்று கேட்டதற்கு கே.பி.முனுசாமி கூறியதாவது:–

அவர்களுடைய வக்கீல்கள், சின்னத்தை முடக்க வேண்டும் என்ற வாதத்தை வைத்தார்கள். இது தேர்தல் கமி‌ஷன் விசாரணையில் பதிவாகி இருக்கிறது. இப்படித்தான் அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள். தொண்டர்களே இல்லாத ஒரு கூட்டம் இந்த கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற நினைக்கிறது. எனவே அவர்கள் எண்ணம் ஈடேறாது. அதனால் தான் அவர்களுடைய வக்கீல், யாருக்கும் கிடைக்காமல் செய்யும் வகையில் சின்னத்தை முடக்க வேண்டும் என்று வாதாடினார்.

கட்சியின் பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் இருக்கிறார்கள். எனவே அனைத்து வகையிலும் தோல்வி காணப்போகும் அவர்கள் இப்படி ஏதேதோ வகையில் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply