தனியார் மயமாக்கல் மூலமாகவும் கடன்கள் அடைக்கப்படும் : இந்திரஜித் குமாரசுவாமி

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தெளிவான திட்டம், இலங்கையிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, துணை நிறுவனங்களின் விற்பனை மூலமாகவும், அதேபோல் தனியார்மயமாக்கல் மூலமாகவும் கிடைக்கும் பணம், கடன்களை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஆளுநர் குமாரசுவாமி, “இதை [கடனை] ஓர் அச்சுறுத்தலாக நாங்கள் பார்க்கவில்லை” என்று தெரிவித்ததோடு, “இதுவரை நாங்கள், கடன் மீளச்செலுத்தலுக்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடவில்லை. அதைச் செய்யும் நோக்கம் எங்களுக்கில்லை. இந்நிலைமையைச் சமாளிக்கும் தெளிவான திட்டம், எங்களிடமுள்ளது” என்று தெரிவித்தார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன், 2016ஆம் ஆண்டின் முடிவில், 47 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் – அதாவது இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 57 சதவீதமாக – உள்ளன. அக்கடன்களில் 68 சதவீதமானவை, அரசதுறையின் கடன்களாக உள்ளன. மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னாள் அரசாங்கம் பெற்ற கடன்களே, இலங்கையின் இவ்வாறான நிலைமைக்குக் காரணமாக உள்ளது என, அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

எனினும், அடுத்தாண்டில், கடனெதனையும் திருப்பியளிக்க வேண்டிய தேவையில்லாமை, இலங்கைக்கு அனுகூலமானது என, ஆளுநர் குறிப்பிட்டார். “அதிர்ஷ்டவசமாக, சர்வதேச இறையாண்மைப் பிணைமுறி எவையும், அடுத்தாண்டில் முதிர்ச்சியடையவில்லை. ஆனால், 2019ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு, பிணைமுறிகளின் முதிர்ச்சியடைதல் காணப்படுகின்றன” என்று குறிப்பிட்ட அவர், அடுத்தாண்டை, நிதிச் சேகரித்தலுக்காக அரசாங்கம் பயன்படுத்துமெனவும் குறிப்பிட்டார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply