அமெரிக்காவில் 11 நாட்களுக்கு முன் மாயம்: இந்திய சிறுமியை தேடும் பணியில் ஆளில்லா விமானங்கள்

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ரிச்சர்ட்சன் நகரில் தனது மனைவி, 4 வயது சொந்த மகள் மற்றும் 3 வயது வளர்ப்பு மகள் ஷெரின் மேத்யூசுடன் வசித்து வந்தவர் தந்தை வெஸ்லி மேத்யூஸ். இவர்கள் அனைவரும் இந்தியர்கள். சம்பவத்தன்று, சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்தாள். இது அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லிக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. உடனே அவர் அந்த சிறுமியை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் விட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி காணாமல் போனாள்.

இது குறித்து அவர், ரிச்சர்ட்சன் நகர் போலீசில் புகார் செய்தார். சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த சிறுமியை போலீசார் தேடினர். ஆனால் சிறுமி என்ன ஆனாள் என்றோ, எங்கு போனாள் என்றோ தெரியவில்லை.

இந்த நிலையில் சிறுமியை தேடும் பணியில் ஆளில்லா விமானங்களை போலீசார் பயன்படுத்தி தேடுகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி கெவின் பெர்லிச் கூறுகையில், “அவளை உயிருடன் கண்டுபிடிக்க முடியும் என்று நாங்கள் உறுதியுடன் நம்புகிறோம். ஆனால் நேரம்தான் எங்கள் எதிரியாக உள்ளது. முடிந்தளவுக்கு அவளை விரைவாக கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான வெஸ்லி தம்பதியர், ஒத்துழைக்க மறுப்பதாக போலீசார் கூறுகின்றனர். இதற்கிடையே வெஸ்லி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சம்பவம் நடந்து 11 நாட்களாகியும் சிறுமி ஷெரின் பற்றி சரியான தகவல்கள் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply