மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை

இலங்கையில் மூன்று பிரதான மொழிகள் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக விளங்கும் அதேவேளையில், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களால் பிரதானமாகப் பேசப்பட்டு வரும் மொழியாக தமிழ் இருந்து வருகின்றது.

இலங்கை குடியேற்ற நாடாக இருந்த காலகட்டங்களில் ஆங்கிலம் அரசகரும மொழியாக இருந்ததுடன் நாட்டில் இருந்த அனைவராலும் கற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்றாகவும் கருதப்பட்டது.

பாடசாலைகள் கூட, ஆங்கில மொழி மூலமே பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. 1956 ஆம் ஆண்டின் பின்னர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் வருகையுடன் நாட்டில் குட்டிப் புரட்சியொன்று இடம்பெற்றது. அவர் சிங்களத்தை அரசகரும மொழியாக்குவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

அதன் பிரகாரம், கடந்த 1959 இல் சிங்களம் மட்டும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எது எப்படியிருந்த போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போது தமிழ் மொழியும் அரச கரும மொழி அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது.

ஆயினும், ஆங்கில மொழி உபயோகம் பற்றி அப்போது எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அரசாங்க உத்தியோகத்தர்கள் கூட தங்கள் பதவி உயர்வுகளுக்காக சிங்களத்தையே கற்றுத் தெளிய வேண்டியவர்களாக இருந்தனர். சிங்களத்தைக் கற்றுக் கொள்ள முடியாமல் அல்லது கற்றுக் கொள்ள விரும்பாமல் இருந்த பறங்கியர் இனத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அரசாங்க சேவையிலிருந்து விலகிக் கொண்டதுடன் பலர் புலம்பெயர்ந்தும் இருந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவையை உணரத் தலைப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட பாடப் புத்தகங்களை சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமை காரணமாக நீதிமன்றங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குக் கூட அடிக்கடி தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன.

இவ்வாறாக, உத்தியோகபூர்வப் பணிகளுக்கு வசதியேற்படுத்தும் முகமாக, அப்போது மொழிபெயர்ப்பாளர்கள் சேவையொன்று அறிமுகம் செய்யப்பட்டது. எழுத்தில் உள்ளதை அல்லது பேச்சை வேறுபட்ட மொழியொன்றில் விளக்கிக் கூறுவதனை விசேடமாக தொழில் ஒன்றாகக் கொண்டிருப்பவரே ஒரு மொழிபெயர்ப்பாளராவார்.

மொழிபெயர்ப்பாளரின் (Translator) ஒத்த இயல்பைக் கொண்டுள்ள ‘உரைபெயர்ப்பாளர்’ (Interpreter) என்பவர், ஒருவர் சொல்வதை இன்னுமொரு மொழியில் பெயர்த்துக் கூறுவதைத் தொழிலாகக் கொண்டிருப்பவரென அர்த்தம் கொள்ளப்படுகின்றார். இதனை சுருங்கச் சொல்வதெனில், ‘உரைபெயர்ப்பாளர் என்பவர் வாய்மொழி மூலம் மட்டுமே இன்னொருவரின் உரையை மொழிபெயர்ப்பவராகக் கருதப்படும் அதே சமயத்தில், மொழிபெயர்ப்பாளர் என்பவர் எழுத்துருவிலான மூலப் பகுதிகள் மற்றும் உரைகள் ஆகிய இரண்டிலும் மொழிபெயர்ப்பை மேற்கொள்பவராகக் கருதப்படுகின்றார்.

இன்று, ஏராளமான வெளிநாட்டு அபிவிருத்தி கருத்திட்டங்களும் வியாபார நடவடிக்கைகளும் அதிகரித்து வரும் நிலையில், திறன் படைத்த, தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது உலகம் நாளாந்த வேலைகளை சுலபமாகவும் விரைவாகவும் செய்ய வழிகோலும் தொழிநுட்ப வளர்ச்சியினால் கட்டி ஆளப்பட்டு வருகின்றது. இன்று வங்கித் துறை தொடக்கம் கல்வித்துறை வரையிலான எந்தவித பணியையும் எவரும் இணைய வழி மூலம் செய்து கொள்ள முடியும்.

அதேசமயம், உங்களால் குறிப்பிட்ட ஆவணத்தின் எந்தப் பகுதியையும் கூகுள் மொழிபெயர்ப்பை அல்லது இணையத் தளத்தில் உள்ள ஏதேனும் வேறு கருவியைப் பயன்படுத்தி இலக்கு மொழியில் (Target Language) மொழிபெயர்க்க முடியும். ஆயினும், அதன் பெறுபேற்றை நூற்றுக்கு 100 சதவீதம் சரியென நிச்சயப்படுத்திக் கொள்ள முடியுமா?

ஒரு மனிதனின் மனத்தைப் பதிலீடு செய்வதற்கான திறனை தொழில்நுட்பம் இன்னமும் கொண்டிருக்காதபடியால், அத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களில் முழுமையாகத் தங்கியிருப்பது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல. ஆமாம்! மனித உணர்வுகளை மற்றைய மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதே யதார்த்தமாகும்.

கணனி ஒன்றினால் மூல மொழிக்கு (Source Language) நிகரான ஒத்த சொல்லொன்றை மட்டுமே உங்களுக்கு தர முடியும். அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள கருத்து சரியாக இருக்கலாம் அல்லது பிழையாகவும் இருக்கலாம். இத்தகைய கட்டத்தில்தான் மொழிபெயர்ப்பாளர்களின் முக்கியத்துவத்தை எம்மால் உணர முடிகின்றது.

‘மொழிபெயர்த்தல்’ என்பது இரண்டு மொழிகளுக்கிடையில் வெறுமனே சொற்களைப் பரிமாறிக் கொள்ளும் செயற்பாடொன்றல்ல. நல்லதோர் மொழிபெயர்ப்பாளராக வருவதற்கு தாய்மொழியிலும் ஆங்கில மொழியிலும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல், எழுத்தாற்றல் மற்றும் பாண்டித்தியம் நிறைந்திருத்தல் வேண்டும்.

சிங்களத்திலும் தமிழிலும் உள்ள சொற்களில் இருந்து ஆங்கிலச் சொற்றொடர்கள் வேறுபடுவதாலேயே இத்தகைய மொழிநடை அவசியமாகின்றது. ஏனைய மொழிகளுக்கும் இது பொருந்தக்கூடியதே. அவற்றில் உங்களுக்குப் பரிச்சயம் இல்லாவிடின், உங்களால் திறன்மிக்க மொழிபெயர்ப்பாளர் ஒருவராக வர முடியாமல் போய் விடும்.

மொழிபெயர்ப்பாளர்கள் மூல மொழியிலிருந்து (Source Language) இலக்கு மொழி (Target Language) ஒன்றுக்கு மொழிபெயர்க்கும் போது, அவர்கள் மாற்று இயல்புகளைக் கொண்ட இரண்டு மொழிகளைக் கையாள வேண்டியுள்ளது. மாற்று இயல்புகள் கொண்ட இரண்டு மொழிகள் என்பது, இரண்டு வேறுபாடான கலாசாரங்களையே அர்த்தப்படுத்துகின்றது.

ஆகவே, மொழிபெயர்ப்பாளர் ஒருவரிடத்தில், சொற்களின் கலாசார, பொருளின் நுண்ணிய வேறுபாட்டை அறிந்து கொள்ளவும் சரியான இடத்தில் மிகவும் பொருத்தமான சொல்லைப் பாவிக்கவுமான ஆற்றல் இருக்க வேண்டும்.

அத்தகைய திறமையைப் பெற்றுக் கொள்வதற்கு, மொழிபெயர்ப்பாளர்கள் கூடுமான அளவில் தமது மொழித் திறன்களை வளப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்கள் இரண்டு மொழிகளிலும் நன்கு பரிச்சயம் மிக்கவர்களாகவும் ஆக்கத்திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

சவால்மிக்க இந்தத் துறையில் தடம்பதித்து சாதனை படைக்க வேண்டுமெனில் சீரிய பயிற்சியும், மொழிபெயர்ப்புக் கற்கைகளிலான கல்வித் தகைமைகளும் இருக்க வேண்டும். அத்துடன் புதிய எழுத்துக் கோலங்களையும், சொற்களையும் தானாக மனமுவந்து கற்றுக் கொள்வது இந்தத் துறையில் வெற்றியடைவதற்கு இன்றிமையாததொன்றாகும்.

கடந்த பல வருடங்களாக, சில பல்கலைக்கழகங்கள் மொழிபெயர்ப்பாளர்களுக்கென பட்டப் படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. தற்போது, களனி, சப்ரகமுவ மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்கள் மொழிபெயர்ப்புக் கற்கைகளிலான நான்கு வருட கால பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தி வருகின்றன.

மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட மொழிகளும் மொழிபெயர்ப்பு உத்திகளும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மொழிபெயர்ப்பிலான பட்டறிவு பெற்று பட்டதாரிகளாக வெளியேறியதும் அவர்கள் பல்வேறு அரச திணைக்களங்களால் உள்ளீர்க்கப்படவுள்ளனர். மேலும், மொழிபெயர்ப்பாளர்களுக்கான பரீட்சைகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக நீதி அமைச்சு சத்தியப்பிரமாணம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கும் பொருட்டு நாடு தழுவிய ரீதியில், போட்டிப் பரீட்சையொன்றை நடாத்தி வருகின்றமை இங்கு கவனித்தக்கது.

நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் துறைகளில் தகுதிவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு பெரும் கிராக்கியொன்று காணப்படுகின்றது.

மொழிகளைக் கையாளுவதில், ஆர்வமும் திறமையும் உள்ளவர்களுக்கு இந்தச் சேவையானது தொழில்வாய்ப்பைத் தேடித் தரும் புதியதோர் வழியாகுமெனில் அது மிகையன்று.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply