விசாரணையை ஒத்திப்போட தினகரன் தரப்பு கோரிக்கை தேர்தல் கமிஷன் நிராகரித்தது
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றிய விசாரணையை 1¼ மணி நேரத்துக்கு ஒத்தி வைக்குமாறு தினகரன் தரப்பு விடுத்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்–அமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய ஒன்றுபட்ட அ.தி.மு.க.அணியும் டி.டி.வி.தினகரன் அணியும், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரும் மனுவின் மீதான விசாரணை தேர்தல் கமிஷனில் நடைபெற்று வருகிறது. கடந்த 16–ந் தேதி 2–வது கட்ட விசாரணை நடைபெற்றது.
3–வது கட்ட விசாரணை வருகிற 23–ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடங்குகிறது.
இந்த நிலையில் தினகரன் தரப்பு வக்கீல் மோகித்பால் நேற்று தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 23–ந் தேதி நடைபெற இருக்கும் 3–வது கட்ட விசாரணையில் தங்கள் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு ஆஜராக உள்ளதாகவும், ஆனால் அன்று பிற்பகலில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டி இருப்பதால், பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருக்கும் விசாரணையை பிற்பகல் 4.15 மணிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருந்தார்.
இது குறித்து வக்கீல் மோகித்பாலுக்கு தேர்தல் கமிஷன் நேற்று அனுப்பிய மின்னஞ்சலில், அனைத்து வக்கீல்கள், மனுதாரர்கள் மற்றும் எதிர்பதில் மனுதாரர்களை கலந்து ஆலோசித்த பிறகே 3–வது கட்ட விசாரணை 23–ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதாகவும், எனவே விசாரணை தொடங்கும் நேரத்தை மாற்ற கோரும் கோரிக்கையை ஏற்க இயலாது என்றும், திட்டமிட்டபடி அன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply