தமிழிசை சவுந்தரராஜன் வீடு முன்பு உருவபொம்மை எரித்து போராட்டம்; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 12 பேர் கைது

திருமாவளவன் பற்றி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சவுந்தரராஜன் வீடு முன்பு அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் அளித்த பேட்டியில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து செய்பவர், நிலத்தின் உரிமையாளரை மிரட்டி கையெழுத்து வாங்கி அந்த நிலத்தை அபகரித்துவிடுவார். அவர்களது அலுவலகமும் வளைத்துபோட்டது தான்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.கோ.ஆதவன், விருகம்பாக்கம் தொகுதி செயலாளர் கரிகால்வளவன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் தமிழிசை சவுந்தரராஜன் மீது புகார் அளிக்க விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் விருகம்பாக்கம், லோகையா காலனியில் உள்ள தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் முன்பு கூடி, அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர்கள் அணி மாநில செயலாளர் பார்வேந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும், அதன் தலைவர் தொல்.திருமாவளவன் மீதும் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து அதன்மூலம் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கும் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதுபோன்ற இன்னொரு புகார் மனு திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply