யாப்பைத் திணித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது : மஹிந்த ராஜபக்ஷ

“புதிய அரசமைப்பை, நாட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி, பலாத்காரமாகக் கொண்டுவருவதற்கு, அரசாங்கம் முயல்கின்றது” என்று, சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, யாப்பைத் திணித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

மறைந்த நாகொட அமரவங்ச தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, மருதானை விகாரைக்குச் சென்றிருந்த போது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

“மல்வத்து, அஸ்கிரிய, கோட்டே உட்பட சகல பீடங்களும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கத்தோலிக்க சபையும் யாப்பு விடயத்தை அவதானமாகக் கையாள வேண்டும் என்று கோரியுள்ளது. முழு நாடும் புதிய அரசமைப்பு உருவாவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், பலாத்காரமாக புதிய யாப்பை திணிக்க அரசாங்கம் முயல்கிறது” என்றும் அவர் குற்றம்சாட்டினார். “மகா சங்கத்தினர் சொல்வதை கூட இந்த அரசாங்கம் செவிமடுப்பதாக இல்லை.பெரும்பான்மையினரும் முழுநாடும் புதிய யாப்புக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, அரசமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் கூறிவருகிறது. இந்தப் புதிய யாப்பினூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது” என்றார்.

உள்ளூராட்சி தேர்தல் தாமதமாவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் நடத்தும் திகதி பற்றிக் கூறி வருகின்றனர். தேர்தல் எப்பொழுது நடத்தினாலும் நாம் அதற்குத் தயாராக இருக்கிறோம். தேர்தலுக்கு முகங்கொடுக்க பயந்தே அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வருகிறது. உள்ளூராட்சி தேர்தலில் நாம் அமோக வெற்றியீட்டுவோம்” என்றார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply