எதிர்க்கட்சி புறக்கணிப்பை மீறி கென்யாவில் மறு தேர்தல்: நாடு முழுவதும் பயங்கர கலவரம்

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபராக ஊகுரு கென்யட்டா இருந்து வருகிறார். அவரது பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது.அவருக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ரைலா ஓடிங்கோ போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் மறுபடியும் ஊகுரு கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் கூறப்பட்டது. முறை கேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் தேர்தலை ரத்து செய்து தேர்தல் துறை உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இன்று தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பழைய ஓட்டு சீட்டு முறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் கூறி வந்தார்.

ஆனால், அதை செய்யாமலேயே தேர்தல் ஏற்பாடுகள் நடந்தன. இதனால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சு விசாரித்தது.

தீர்ப்பு சொல்ல வேண்டிய கடைசி நாளில் 7 நீதிபதிகளுக்கு பதில் 2 பேர் மட்டுமே வந்தனர். இதனால் தீர்ப்பு கூறப்படவில்லை.

எனவே, திட்டமிட்டபடி இன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி அறிவித்தது. ஆனாலும், வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இன்று தேர்தல் நடந்ததை எதிர்த்து பல இடங்களிலும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் வன்முறை வெடித்தது.

கென்யாவின் முக்கிய நகரமான கிசுமு நகரில் பல இடங்களில் தீ வைக்கப்பட்டது. போலீசார் கண்ணீர் புகை வீச்சு, துப்பாக்கி சூடு போன்றவற்றை நடத்தினார்கள். ஆளும் கட்சியினர்- எதிர்க்கட்சியினர் ஆங்காங்கே மோதி கொண்டனர்.

இன்றைய கலவரத்தில் பலர் உயிர் இழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த தேர்தலில் அதிபர் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவித்ததும் பல இடங்களில் கலவரம் நடந்தது. அதில், 70 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply