விமலுக்கும் கமாலுக்கும் அஞ்சப்போவதில்லை:டிலான் பெரேரா
விமல் வீரவன்சவுக்கும் கமால் குணரட்னவுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை நாங்கள் கொண்டுவந்தே தீருவோம். கமால் குணரட்னவினதும் விமல் வீரவன்சவினதும் அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒருபோதும் பயப்படமாட்டோம் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
தற்போதைய வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் காணப்படுகின்ற ஒருமித்த நாடு என்ற பதத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக ஜனாதிபதி முறைமை அவ்வாறே இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டினார்.
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கொல்லவேண்டும் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் பாராளுமன்றத்திற்கு குண்டுவைக்கப்படும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளமை தொடர்பாகவும் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்; தற்போது இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒருமித்த நாடு என்ற பதத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்ப்பு வெளியிடவில்லை. ஆனால் ஒரு சிலவிடயங்களில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
அதாவது தேர்தல் முறை மாற்றப்படவேண்டும். அதிகாரப்பகிர்வு செய்யப்படவேண்டும். அதேநேரம் ஜனாதிபதி முறைமையானது மாற்றப்படக்கூடாது. ஜனாதிபதி முறைமை நீடிக்கவேண்டியது அவசியமாகும். இதுதொடர்பில் எமது கட்சி மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றது.
எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றும் மொழி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தமிழ் மக்களுக்கு அநீதி காணப்படுகின்றது. எனவே அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும்.
அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமாகும். நாம் அதற்காகவே குரல் கொடுக்கின்றோம். எவ்வாறெனினும் தற்போதைய இறுதி சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டுவிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இதேவேளை பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசுவதாக விமல் வீரவன்சவும், அரசியலமைப்பை ஆதரிப்பவர்களை கொல்லவேண்டும் என்று இராணுவ அதிகாரி கமால் குணரட்னவும் தெரிவித்திருக்கின்றார்கள். கமால் குணரட்னவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் ஒன்றைக் கூற விரும்புகின்றோம். அதாவது இவர்கள் இருக்கும் அஞ்சி அரசியலமைப்பு செயற்பாடுகளை நாங்கள் பின்னோக்கி செல்ல மாட்டோம்.
இவர்கள் இருவருக்கும் அச்சமடைந்து அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளை நிறுத்தமாட்டோம். நாங்கள் அரசியலமைப்பை உருவாக்கியே தீருவோம். கமல் குணரட்னவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் பயந்து புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாடுகளை நிறுத்திவிடுவோம் என யாரும் எதிர்பார்க்க முடியாது. நாம் அரசியலமைப்பை கொண்டுவந்தே தீருவோம் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கின்றோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply